/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/885_77.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர் விவசாயி மார்க்கண்டேயன். வயதான இவருக்கு இவர் வளர்க்கும் ஆடுகள் தான் வாழ்வாதாரமே. ஆடுகளை குழந்தைகளைப் போல் வளர்த்து வந்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வருவார். மாலையில் அவர், குரல் கொடுத்ததும் காடு, மேடுகளில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள் இவரிடம் ஓடிவந்து நிற்கும். வீட்டுக்கு ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்.
நவம்பர் 8 ஆம் தேதி காலை முதலே தமிழ்நாடு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டு இருந்தது. மதியம் முதல் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தச்சூர் அருகே உள்ள வரதகாண்டம் பகுதியில் தனது 15 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் மார்க்கண்டேயன். மழையில் நனையாமல் இருக்க அங்குள்ள பம்பு செட் ஓரம் ஒதுங்கியுள்ளார். மழை கொஞ்சம் அதிகமாகப் பெய்ததும் தனது ஆடுகள் மழையில் நனைவதைப் பார்த்து கவலையானவர் ஆடுகளுக்கு குரல் கொடுத்ததும் அவர் இருந்த இடத்துக்கு ஓடிவந்து மழையில் நனையாமல் அவர் அருகே நின்றது. சிறிய இடத்தில் 20 ஆடுகள் நின்றுள்ளது.
அப்போது அந்தப் பகுதியில் கனமழையுடன் திடீரென இடி இடித்து மின்னல் வெட்டியுள்ளது. மின்னலின் ஒரு பகுதி விவசாய நிலத்தில் பம்பு செட் அறையின் வெளியே மழைக்காக நின்று கொண்டிருந்த மார்க்கண்டேயன் மற்றும் அவரது ஆடுகள் மீது பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே மார்க்கண்டேயன் மற்றும் சுமார் 15 ஆடுகளுடன் சம்பவ இடத்திலேயேபலியானார்.
மழை விட்டதும் அப்பக்கம் சென்றவர்கள் ஆடுகளும், மார்க்கண்டேயனும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகினர். இதுகுறித்து அதிகாரிகளுக்குத்தகவல் அனுப்பினர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். களம்பூர் காவல் நிலைய போலீசார் விவசாயி சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இடி தாக்கி இறந்த 15 ஆடுகளைக் குழி தோண்டிப் புதைத்துள்ளனர். தனது பிள்ளைகள் போல் வளர்த்த ஆடுகளுடன் விவசாயி மரணத்தை தழுவியுள்ளதை சொல்லிச்சொல்லி அழுதுகொண்டு இருக்கிறார்கள் அவர்களது உறவினர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)