ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பு மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்                    

01:18 PM Sep 23, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இதன் பின்புறம் அமைந்துள்ள சரசு என்பவரின் காட்டுக்கொட்டாய் பகுதியில் ஒரு வீட்டில் வசித்த வந்த ஒருவர், கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து,கருவின் பாலினம் பற்றி தெரிவிப்பதாக சுகாதாரத்துறைக்கு பல புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் சுகாதார நலப் பணிகள் டாக்டர் ராமு தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நலக்குழுமம் பொறுப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிக்கும் அன்பழகன் மகன் வடிவேலு என்பவர் தான் இந்த செயலை செய்து வந்துள்ளார் என்று தெரியவந்தது. மேலும், அவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரசு என்பவரின் காட்டுக்கொட்டாயில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு அவர், சட்டவிரோதமாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கருக்கலைப்பும் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து, அந்த அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து, கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்ற பாலினம் குறித்தும் தெரிவித்து வந்துள்ளார். இதன் மூலம் ஏகப்பட்ட பணம் சம்பாதித்து வந்துள்ளார். இதற்கு அவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த, சரசு என்பவர், உதவியாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவிக்க தயார் நிலையில் பரிசோதனை அறிக்கையும் தயார் செய்து வைத்திருந்தது என்று தெரிய வந்தது. இந்த நிலையில் தான் சுகாதாரத்துறை ஆய்வுக்குழுவினர் வடிவேலு இருந்த வீட்டை சோதனை செய்ய வந்துள்ளனர்.

இதனிடையே, ஆய்வுக்குழு வருவதை தெரிந்து கொண்ட வடிவேலு, ஸ்கேன் பரிசோதனை எந்திரத்தை‌ உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஒருவருடன் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து சுகாதாரத்துறை ஆய்வுக் குழு அதிகாரிகள், சட்டவிரோத கருக்கலைப்பு செய்து ஸ்கேன்‌ செய்து வந்த வடிவேலுவின் மையத்துக்கு சீல் வைத்தனர்.அதையடுத்து வடிவேலு மீதும், அவருக்கு உதவியாக இருந்த சரசு என்பவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT