Mother passed away with infant? - Police in serious investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மணலூர்பேட்டை பேரூராட்சி. இந்த ஊரைச் சேர்ந்தவர் குப்புசவுரி. இவரது மகள் இருபத்தாறு வயதான ஆஷா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்துவைத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் கவியாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஆஷாவின் கணவர் வினோத்குமார், திருப்பூரில் பின்னலாடை கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். ஆஷா, மணலூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம் (18.12.2021) வினோத் குமார் தனது மனைவி ஆஷாவுடன் பேசுவதற்காக ஃபோன் செய்துள்ளார். ஆஷா ஃபோனை எடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து வினோத் குமார், தனது தாயாருக்கும் மாமியாருக்கும் ஃபோன் செய்து ஆஷா குடியிருக்கும் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து பெண் சம்பந்திகள் இருவரும் ஆஷா குடியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்ஆஷா. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் சம்பந்திகள் இருவரும், அருகில் குழந்தை கவியாழினி இறந்து கிடந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

உடனடியாக மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதோடு, மோப்பநாயை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். தாய், குழந்தை ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆஷாவின் ஒரு வயது குழந்தை நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், அதனால் ஆஷா மனநிம்மதி இல்லாமல் இருந்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இருந்தும் ஆஷா, வினோத்குமார் இருவருக்கும் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆவதால் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார். குழந்தையுடன் தாய் இறந்த சம்பவம் மர்மமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.