ADVERTISEMENT

தரமற்ற மின்கம்பம்... தொழிலாளர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு... தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

07:44 AM Jul 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தரமற்ற மின்கம்பத்தில் ஏறி பணியாற்றியபோது மின்கம்பம் உடைந்து விழுந்ததில் தொழிலாளர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் மற்றொரு தொழிலாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விழுப்புரம் மின் கழக தொ.மு.சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், விழுப்புரம் மின் திட்டத்தில் களப் பணியாளர்கள் பற்றாக்குறையால், அலுவலர்களின் நிர்பந்தத்தில் மிகக் குறுகிய நேரத்தில் அவசரமாகப் பணிகளைச் செய்ய நேரிடும். அந்தந்த பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலகத்தில் பணி புரியும் முகவர்கள், மின் பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்களுக்கு வேலை செய்யக் கட்டளை வரும்போது பிரிவு அலுவலருக்குப் பயந்து அவர் சொல்லும் முன் அனுபவம் இல்லாத தினக் கூலிப் பணியாளர்களோடு சென்று பணியாற்றுவதாலும் தரமற்ற தளவாடச் சாமான்களைக் கொண்டு பணிகளைச் செய்வதாலும்தான் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.

விபத்தில் சில சமயங்களில் தொழிலாளர்கள் மரணிக்கும் சம்பவமும் நிகழ்கிறது. மரணம் அடையும் நிரந்தர பணியாளருக்கு ரூ.3. லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ஊனம் அடைந்தவருக்கு நீண்ட போரட்டத்திற்குப் பிறகு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை, அவ்வளவுதான்.

அது போன்ற அதிர்ச்சி தரும் நிகழ்வு 07.07.2020 திண்டிவனம் கோட்டம் திருவக்கரை பிரிவு அலுவலரால் அரங்கேறியுள்ளது. செஞ்சி பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட முன் அனுபவம் இல்லாத தினக்கூலித் தொழிலாளர்கள் சுமார் 20 நபர்களைக் கொண்டு பிரிவு அலுவலக களப்பணிகளை 3 விதமாகப் பிரித்து பணி ஒதுக்கீடு செய்து களப்பணி வாரியத்தின் மூலம் பிரிவு அலுவலரால் வழங்கப்பட்ட 9 மீட்டர் தரமற்ற கம்பம் மற்றும் தளவாடச் சாமான்களைப் பயன்படுத்தி உயர் மின் அழுத்த பாதை பணிகளை மேற்கொண்டனர். அப்போது பிடுங்கி வளைந்த காரணத்தினால் மின் கம்பம் உடைந்ததால் உச்சியில் ஏறி பணி செய்து கொண்டிருந்த கோ.தங்கமணி என்கிற தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தும் ஏ.பிரகாஷ் என்பவர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

இது போன்ற ஒப்பந்த அனுமதி பெறாமல் நமது விழுப்புரம் மின் திட்டத்தில் பல பிரிவுகளில் (குறிப்பாக திண்டிவனம், செஞ்சி கோட்டம்) பிரிவு அலுவலரின் செயல்களைக் கோட்ட/திட்ட அலுவளர்களிடம் மின் கழக தொ.மு.சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டும் இது பற்றி இந்த விபத்து வரை செவி சாய்க்கவில்லை.

இனியாவது கோட்ட/திட்ட நிர்வாகம் செவி சாய்த்து தன்னிச்சையாகச் செயல்படும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிர் பலியினைத் தடுக்க வேண்டும். மேலும், திட்டத்தில் கொள்முதல் செய்து அளிக்கப்படுகிற தளவாடச் சாமான்களைப் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் (Check Measurement Officer) பணியாளர்களின் உயிர்களைத் தங்களது உயிராக நினைத்து நேரடியாக பண்டக சாலைக்குச் சென்று தளவாடப் பொருட்களை சோதனை செய்து களப் பணியாளர்களின் உயிர் பலியைத் தடுத்திடவும் உங்களின் ஒருவராகக் கேட்டு கொள்கிறோம் என விழுப்புரம் மின் கழக தொ.மு.சங்கம் கூறியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT