ADVERTISEMENT

எத்தனை ரெட் அலர்ட் கொடுத்தாலும் இது தான் எங்க வீடு... கண்ணீர் வர வைக்கும் கிராமத்து வாழ்க்கை!

10:04 PM Nov 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக மழையாகப் பெய்யும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எச்சரிக்கையாக இருங்கள் என்று வானிலை ஆய்வு மையங்கள் தகவல்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

சென்னை உள்படத் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்து மாடி மேல மாடி வச்சு கட்டினாலும் கீழே இறங்க முடியாத அளவுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பாலாற்றில் 100 வருடங்களுக்குப் பிறகு முழு கொள்ளளவில் தண்ணீர் ஓட, ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் சாய்ந்து விழும் காட்சிகள் பதற வைத்திருக்கிறது. இப்படி மாடி வீடுகளே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் சாதாரண குடிசை வீடுகள் தண்ணீரோடு சேரும் சகதியுமாக மாறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகளின் 40 வீடுகள். அத்தனையும் 7 அடி உயரத்தில் உள்ள கீற்றுக் கொட்டகைகள். சுற்றிலும் சேலைத் துணிகளும், கிழிந்த பிளக்ஸ் பேனர்களுமே மேற்கூரையாகவும், சுற்றுச் சுவராகவும் உள்ளது. தவழ்ந்துதான் வீட்டுக்குள் செல்ல வேண்டும். அந்த தெருவிலிருந்த ஒற்றை ஓட்டு வீடும் நேற்று கொட்டிப்போனது. சுற்றிலும் மழைத் தண்ணீர் சூழ்ந்து குடிசைக்குள்ளும் தண்ணீர். சமைக்கக் கூட வழியில்லை. சாக்குகளைத் தரையில் விரித்து அமர்ந்து மட்டும் இருக்கலாம். ஆடு, மாடுகள் ஒரு பக்கம் மனிதர்கள் மற்றொரு பக்கமான வசிப்பிடம். இது தான் இந்த பகுதியின் வாழ்விடம்.

ஒரு தார்ப் பாய் மூடிய குடிசைக்குள் பிறந்து 13 நாட்களேயான பச்சிளங் குழந்தையை ஈரத் தரையில் சாக்கு விரித்துப் படுக்க வைத்திருந்த காட்சி கண்களைக் கலங்கச் செய்தது. ''எங்களுக்குனு இருக்கிற குடிசையில தான் குழந்தையையும் வச்சிருக்கலாம்'' என்றார் அந்த தாய்.

இது மேற்பனைக்காடு கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் லட்சக்கணக்கான கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்விடங்களும் இப்படித்தான் உள்ளது. எப்போது மாறும் இவர்களின் வாழ்க்கை. என்றாவது ஒரு நாள் நாங்களும் மெத்தை வீடு கட்டுவோம் என்ற அவர்களின் லட்சியம் கனவாகவே போகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT