ADVERTISEMENT

பொதுக்குழுவுக்கு தடையில்லை- ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை! 

10:16 PM Jun 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழுவைத் திட்டமிட்டப்படி நடத்தலாம். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதை முடிவு செய்வது கட்சி தான்; நீதிமன்றம் தலையிட முடியாது. நிர்வாக வசதிக்காக சட்டத் திட்டங்களைக் கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனைத்து தரப்பினரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே யூகித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை என்று கூறினார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நாளை (23/06/2022) நடைபெறவுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT