ADVERTISEMENT

நிவர் புயல்... 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து ரத்து!! 

07:19 PM Nov 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. நாளை தீவிரப் புயலாகவும் மாறி வடமேற்குத் திசையில் நகர்ந்து, தற்போதைய நிலவரப்படி, வரும் 25 -ஆம் தேதி பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் 26 -ஆம் தேதி வரை, மழை நீடிக்கும். அதேபோல் புயல் கரையைக் கடக்கும் பொழுது 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'நிவர்' புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துச் சேவை, நாளை மதியம் 1 மணி வரை நிறுத்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நாளை மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும். 24, 25 ஆம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால், மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆதார், ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாக்க வேண்டும். நிவாரண முகாம்களில் போதுமான அளவு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை இருப்பு வைக்க, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT