ADVERTISEMENT

புதிதாகக் கட்டப்பட்ட வீடு; செப்டிக் டேங்கில் நிகழ்ந்த 3 உயிரிழப்புகள்; கடலூரில் பரிதாபம்

08:20 PM May 14, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கழிவறைத் தொட்டியில் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது கானூர். இந்த ஊராட்சியில் உள்ள மாஞ்சோலை தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான கிருஷ்ணமூர்த்தி. இவர் புதிதாக ஒரு வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டுக்கு அருகில் கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அதன் மீது கான்கிரீட் தளம் போட்டு மூடுவதற்காக கழிகளை நட்டு சாரம் கட்டி தளம் போட்டுள்ளார். கான்கிரீட் தளம் கெட்டியானதும் நேற்று அந்த தளத்திற்கு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த சாரத்தைப் பிரித்து எடுக்கும் பணியில் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, சின்ன கானூரைச் சேர்ந்த பாலச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி உறவினர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய மூவரும் ஈடுபட்டு இருந்தனர்.

சார தட்டுகளைப் பிரித்து எடுக்கும் பணிக்காகத் தொட்டியில் இறங்கிய மூவரும் சிறிது நேரத்தில் மயங்கி தொட்டியின் உள்ளேயே விழுந்துள்ளனர். சாரத்தைப் பிரிப்பதற்காக உள்ளே இறங்கி நீண்ட நேரம் ஆகியும் ஒருவர் கூட வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் தாயார் சரசு தொட்டிக்குள் எட்டிப் பார்த்துள்ளார். மூன்று பேரும் உள்ளே பேச்சு மூச்சு இன்றி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டுக் கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களில் சிலர் தொட்டியில் இறங்கி மூவரையும் காப்பாற்ற முயலும்போது அவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறையினருக்கும் ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வீரமணி, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து உள்ளே விழுந்து கிடந்த மூவரையும் மீட்டுக் கொண்டு வந்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த மூவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பாலச்சந்தருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. அம்மன் ராணி என்ற மனைவி உள்ளார். அதோடு தற்போது அம்மன் ராணி கர்ப்பிணியாகவும் இருந்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மூன்று பேர் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் இறந்து போன சம்பவம் கானூர் பகுதி கிராம மக்கள் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT