ADVERTISEMENT

இரட்டை இலைச் சின்னத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

06:06 PM Feb 28, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கூடாது என, தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சம்பந்தமான சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்.

அதிலும் குறிப்பாக வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். இருப்பினும் தான் அளித்துள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT