ADVERTISEMENT

நாங்குநேரி சம்பவம்; மேலும் ஒரு சிறுவன் கைது

09:56 AM Aug 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையின் தாயிடம், தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண நிதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் குற்றச் சம்பவத்தில் ஏற்கனவே 6 சிறுவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான 7 பேர் மீதும் 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT