நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையின் தாயிடம், தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண நிதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்ட காணொளியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.