ADVERTISEMENT

குழந்தை விற்பனை கும்பலை காவலில் எடுத்தது சிபிசிஐடி போலீஸ்!

11:49 PM May 08, 2019 | elayaraja

ADVERTISEMENT

ராசிபுரம் அருகே, குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றிய முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் அருள்சாமி, பர்வின், ஹசீனா, லீலா, செல்வி ஆகிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக, அதிகாரப்பூர்வமற்ற வகையில் பல்வேறு அதிர் ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்ததால் முக்கிய குற்றவாளிகளான அமுதவல்லி, முருகேசன், அருள்சாமி ஆகியோரை மட்டும் முதல்கட்டமாக காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது.


இது தொடர்பாக சிபிசிஐடி நாமக்கல் மாவட்டம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று (மே 7, 2019) மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்து நீதிபதி கருணாநிதி, மூவருக்கும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.


இதையடுத்து, மூவரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி காவல்துறை அவர்களை சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்தது. எஸ்பி சாமுண்டீஸ்வரி தலைமையில் டிஎஸ்பி கிருஷ்ணன், ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் விசாரணை நடத்தினர். இன்று நடந்த முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.


இந்த கும்பல் கொல்லிமலையில் வசிக்கும் பழங்குடியின தம்பதிகளை குறிவைத்து இயங்கி வந்தது குறித்து நக்கீரன் இணையம் ஆரம்பத்தில் இருந்தே, சொல்லி வந்துள்ளது. இன்று நடந்த விசாரணையின்போதும், இந்த கும்பல் கொல்லிமலை பழங்குடியின பெண்கள் பலரிடம் 30 ஆயிரம் ரூபாய் முதல் குழந்தைகளை விலைக்கு வாங்கி அதை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


என்றாலும், அவர்களிடம் குழந்தைகளை வாங்கிச்சென்ற தம்பதிகள் இப்போது எங்கெங்கு வசிக்கிறார்கள் என்ற தகவல்கள் ஏதும் தெரியாது என்றே சொல்லி வைத்தாற்போல் மூன்றும் பேரும் தெரிவித்துள்ளனர்.


இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அவற்றில், கொல்லிமலை பகுதிகளில் 50 பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதற்கான தகவல்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT