ADVERTISEMENT

நக்கீரன் இணையதளம்  செய்தி எதிரொலி!  திமுக மாவட்ட பொறுப்பாளர்  அதிரடி மாற்றம்!!

01:12 AM Jul 03, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடந்த 21ம்தேதி ’திமுகவில் தலைவிரித்தாடும் உள்கட்சி கோஷ்டி பூசல் உ.பி.கள் வேதனை’ என்ற தலைப்பில் நமது நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இச் செய்தியை இணையதளத்தில் உபிகள் படித்தவுடனே திமுக குரூப் வாட்சப் மற்றும் பேஸ்புக்களிலும் போட்டதின் மூலம் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரவி அது செயல் தலைவர் ஸ்டாலின் காதுக்கு வரை போய்விட்டது.
அந்த அளவிற்கு தேனி மாவட்டத்தில் உள்ள உள் கட்சி கோஷ்டி பூசலை தெள்ளத்தெளிவாக வெளியிட்டு இருந்தோம். அதாவது முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கோஷ்டியாகவும், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் இரண்டாவது கோஷ்டியாகவும், கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் மூன்றவாது கோஷ்டியாகவும், கம்பம் முன்னாள் எம்.பி.யும், கழக பேச்சாளருமான செல்வேந்திரன் நான்காவது கோஷ்டியாகவும் தற்போது மாவட்ட பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஜெயக்குமார் ஐந்தாவது கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்று சொல்லி இந்த கோஷ்டி பூசலால் மாவட்டத்தில் கட்சி வளரவில்லை நாளுக்கு நாள் கோஷ்டி பூசல் தான் தலைவிரித்து ஆடி வருகிறது என்பதையும் சுட்ட காட்டி இருந்தோம்.

ADVERTISEMENT


அதுபோல் தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி என நான்கு சட்டமன்ற தொகுதிகள் தான் இருக்கிறது. அப்படி இருந்தும் கூட தி.மு.க.வில் உள்ள உள்கட்சி கோஷ்டி பூசலால் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை தக்க வைக்க முடியவில்லை. நான்கு தொகுதிகளையுமே அ.தி.மு.க. கைப்பற்றியது. இதனால் டென்சன் அடைந்த செயல்தலைவரான ஸ்டாலின் மூக்கையாவிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்து ஓரம் கட்டினார். ஆனால் இருபது வருடங்களாக தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருந்து வந்த மூக்கையாவின் பதவியை அதிரடியாக பறித்ததை கண்டு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மற்றொருபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சந்தோச வெள்ளத்தில் மூழ்கினார்கள்.

இருபது வருடங்களாக மாவட்ட செயலாளராக இருந்த மூக்கையா கட்சியை வளர்ப்பதை விட தன்னை வளர்த்துக் கொண்டு கோஷ்டியைத்தான் உருவாக்கி வந்தார். இனிமேலாவது கட்சி வளர்ச்சிக்கும், தொண்டர்கள் அரவணைத்து போகக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளரை தளபதி நியமிக்க வேண்டும் என கட்சி பொறுப்பாளர்கள் எதிர்பார்த்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கம்பம் செல்வேந்திரனும், தலைமை வரை முட்டி மோதி பார்த்தார். ஆனால் அந்த அளவுக்கு தலைமையும், செல்வேந்திரனுக்கே செல்வாக்கு இருந்தும் கூட கட்சிப் பணியாற்றுவதற்கு செல்வேந்திரன் சரிபட்டு வரமாட்டார். காரில் உட்கார்ந்து கொண்டுதான் அரசியல் பண்ணுவார். தொண்டர்களையும் அரவணைத்து போகமாட்டார் என்று தலைமைக்கு தெரிந்ததின் பேரில் செல்வேந்திரனையும் தலைமை ஒதுக்கியது. அதுபோல் கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனும், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி போட்டனர். இருந்தாலும் மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் மாவட்ட பொறுப்பாளராக நியமிப்பதின் பேரில் கட்சி வளர்ச்சியும் கை கொடுக்கும் என தலைமை முடிவு செய்தது.

அந்த அளவிற்கு மாற்றுக் கட்சிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தனர். அதன் அடிப்படையில் தான் கம்பம் ஒன்றிய செயலாளராக இருந்த ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட பொறுப்பாளராக செயல் தலைவர் ஸ்டாலின் நியமித்தார். அதுபோல் ஜெயக்குமாரும் மாவட்ட பொறுப்பு வந்த உடனே ஊர் ஊருக்கு கட்சித் தொண்டர்களை அரவணைத்து கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி கட்சி வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டி வந்தார். இருந்தாலும் உள்கட்சி கோஷ்டி பூசல் எதிரொலியாக மூக்கையா, ராமகிருஷ்ணன், செல்வேந்திரன், லட்சுமணன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சரிவர கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. அதுபோல் ஜெயக்குமாரும் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை கொடுத்து தனது ஆதரவாக ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு மாவட்டம், நகரம், ஒன்றிய நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சரிவர மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டு கட்சி வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டவில்லை. இந்த விசயம் தலைமைக்கு எட்டியதின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவாலயத்திலிருந்து ஒரு குழு தேனி மாவட்டத்திற்கு விசிட் அடித்து கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிரடி விசாரணை செய்ததில் ஜெயக்குமாரின் செயல்பாடே சரிவர இல்லை என்பதை அறிவாலயத்திலிருந்து வந்த குழுவும் உறுதி செய்தது. அதுபோல் இந்த விசயம் முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் காதிற்கு எட்டவே உடனே ஜெயக்குமாரை திண்டுக்கல்லுக்கு வரச்சொல்லி சத்தம் போட்டதுடன் மட்டுமல்லாமல் இனிமேலாவது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அரவணைத்து கட்சியை வளர்க்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு அறிவுரை சொல்லி அனுப்பியும் இருந்தார்.



அதோடு மாவட்ட பொறுப்பாளரான ஜெயக்குமாரின் ஆதரவாளரான கம்பம் நகர செயலாளர் கிங்செல்லப்பாண்டி ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர். அப்படிப்பட்டவர் தொடர்ந்து கட்சியில் இருந்தால் கட்சிக்கும் தலைவர் தளபதிக்கும் கெட்ட பெயர் தான் ஏற்படும் . அதனால் கிங் செல்லப்பாண்டி பதவியை பறிக்க வேண்டும் என தொடர்ந்து கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் வலியுறுத்தியும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டி காட்டியும் இருந்தோம்.


அதுபோல் கம்பம் நகர துணை செயலாளர் ராமகிருஷ்ணன் ஒபிஎஸ் சை விமர்சித்தார் எனபதற்காக பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்தனர் அதை மூக்கையா செல்வேந்திரன் ராமகிருஷ்ணன். லட்சுமணன் போன்றவர்கள் கண்டித்து அந்த ராமகிருஷ்ணனுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள் ஆனால் மாவட்ட பொருப்பாளர் ஜெயகுமார் அதை கண்டு கொள்ளவில்லை இப்படி பட்டவர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தால் எப்படி கட்சி வளரும் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தோம்.


இந்த நிலையில் தான் கொங்கு மண்டலத்தை கலை எடுத்த ஸ்டாலின் அடுத்த படியாக தெண்டலத்தை கடந்த 1ம்தேதி கலை எடுத்தார் அதில் தான் நமது நக்கீரன் இணைய தளத்தில் சுட்டிக்காட்டிய தேனி மாவட்ட பொருப்பாளர் ஜெயக்குமாரை அதிரடியாக மாற்றிவிட்டு அந்த மாவட்ட பொறுப்பாளர் பதவியை மூன்றாவது கோஷ்டியாக செயல்பட்டு வரும் முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கொடுத்து இருக்கிறார் அதுபோல் கம்பம் நகர செயலாளர் சிங் செல்லப்பாண்டியிடம் இருந்த பொறுப்பை பிடிங்கி துரைநெப்போலியனுக்கு கொடுத்து இருக்கிறார் அதுபோல் தேனி ஒன்றிய செயலாளர் ரத்தன சபாபதியிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டு அந்த பொறுப்பை சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது இப்படி மாவட்டத்தில் பல பொருப்பாளர்களின் பதவி பறிக்கப்பட்டு புது பொறுப்பாளர்கள் போடப்பட்டதின் பேரில் மாவட்டத்தில் உள்ள உபிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதுபோல் புது பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு உள்கட்சியில் உள்ள கோஷ்டி பூசலை எல்லாம் (தற்காலிகமாக ) ஓரம்கட்டி விட்டு உபிகள் அனைவரும் பெரும் திரளாகவே கம்பத்திற்கு படை எடுத்து ராமகிருஷ்ணனுக்கு மாலை சால்வை அணிவித்து வாழ்த்தி வருகிறார்கள். இதன் மூலமாவது துணை முதல்வர் ஒபிஎஸ் மாவட்டமான தேனி மாவட்டத்தில் சூரியன் உதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT