ADVERTISEMENT

நோய்வாய்ப்பட்டவர்களைக் குறி வைக்கும் மர்ம கும்பல்... தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்!

04:38 PM Sep 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா சத்தியவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரத்குமார்-ஜெயந்தி தம்பதி. இவர்களுக்கு அனுஷ் - தனுஷ் என நான்கு வயதுள்ள இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காது கேட்காமலும், வாய் பேச முடியாத நிலையிலும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி சத்தியவாடி கிராமத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள் ஜெயந்தி, சரத்குமார் தம்பதியரின் இரண்டு குழந்தைகளுக்கும் நாட்டு மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் அந்த தம்பதியர் நம்பும் அளவிற்குப் பேசி மடக்கி உள்ளனர். பிறகு மீண்டும் ஒரு நாள் வருவதாகக் கூறி விட்டுச் சென்றவர்கள் கடந்த 4ஆம் தேதி சத்தியவாடி கிராமத்திற்கு மீண்டும் வந்துள்ளனர்.

அந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தியிடம் உங்கள் இரண்டு குழந்தைகளையும் குணப்படுத்துவது எங்கள் பொறுப்பு எனவே நாங்கள் சொல்லும் நாளில் திண்டிவனத்திற்கு வந்தால் உங்களிடம் மருந்து வாங்கிக் கொடுக்கின்றோம்; அதைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சில நாட்களில் குழந்தைகளுக்குக் காது கேட்கும் திறனும், வாய் பேசவும் திறனும் வந்துவிடும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை முழுமையாக ஜெயந்தி நம்பியுள்ளார். அதன்படி நேற்று காலை திண்டிவனத்திற்கு ஜெயந்தியை வரும்படி அவர்கள் செல்போன் மூலம் கூறியுள்ளனர். அதோடு மருந்து செலவிற்காக 45,000 ரூபாய் பணம் எடுத்து வருமாறும் கூறியுள்ளனர்.

மர்ம மனிதர்களின் பேச்சு உண்மை என நம்பிய ஜெயந்தி அவரது சகோதரர் சத்யராஜ் என்பவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு 45,000 பணத்துடன் திண்டிவனத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம நபர்களைச் சந்தித்த ஜெயந்தியிடம் அவர்கள் இருவரும் சிலமருந்துக் கடைகளுக்கு அழைத்துச் சென்று ஏதோ ஒரு மருந்தின் பெயரைக் கூறி கேட்டுள்ளனர். அந்த மருந்து தங்களிடம் இல்லை என்று மருந்து கடைக்காரர்கள் கூறியுள்ளனர். உடனே அந்த மர்ம நபர்கள் ஜெயந்தியிடம் நாங்கள் ஏற்கனவே ஒருவருக்குப் பேசியபடி மருந்து கொண்டு வந்துள்ளோம் வேண்டுமானால் அந்த மருந்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டு அந்த நபருக்கு வேறு மருந்து தயாரித்துக் கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். அதனை நம்பிய ஜெயந்தி 45,000 பணத்தைக் கொடுத்து அவர்கள் கொடுத்த ஒரு மருந்து பாட்டிலை வாங்கியுள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஜெயந்தி அந்த மருந்து பாட்டிலைத் திறந்து முகர்ந்து பார்த்தபோது அதில் வெறும் தண்ணீர் மட்டுமே நிரப்பி இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு மருந்து கொடுப்பது போல் நடித்து நூதன முறையில் 45,000 பறித்துச் சென்ற அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் அருகிலுள்ள பெரிய பாபு சமுத்திரத்தைச் சேர்ந்தவர் ஐயனாரப்பன்.

இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துள்ளனர். இவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். ஐயனாரப்பன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். அவருக்கு உதவியாக 77 வயதுள்ள அவரது அத்தை சுந்தராம்பாள் உடனிருந்து கவனித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணி அளவில் அவர்களது வீட்டிற்கு 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்துள்ளனர். தாங்கள் நாட்டுமருந்து கொடுப்பவர்கள் எனவும் எங்கள் மருந்தை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய சுந்தராம்பாள், ஐயனாருக்கு வைத்தியம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் இருவரும் மூலிகை எண்ணை எனக் கூறி ஐயனாரப்பன் கைகளில் ஒரு திரவத்தைத் தடவி உள்ளனர்.

பின்னர் சுந்தராம்பாளிடமும் நீங்களும் எண்ணைத் தேய்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கும் உடல் வலி சரியாகும் என்று கூறி உள்ளனர். அப்போது சுந்தராம்பாள் எண்ணெய் தேய்ப்பதற்காகத் தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் பவுன் சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த இருவரும் சுந்தராம்பாளின் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். நாட்டு மருத்துவம் பார்ப்பதாகக் கூறி வயதான தன்னிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பற்றி சுந்தராம்பாள் கண்டமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். நாட்டு மருத்துவர்கள் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இது போன்று நாட்டு மருத்துவம் செய்வதாகக் கூறி பல கிராமப்புறங்களில் சென்று அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி பணம் நகை பறிக்கும் கும்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. காவல்துறை இந்த மோசடி கும்பலை விரைவில் பிடிக்க வேண்டும் இல்லையேல் இதுபோன்ற மோசடிகள் சாதாரண ஏழை எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களிடம் தொடரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT