ADVERTISEMENT

"பிளவுபட்ட அ.தி.மு.க.வினரை ஒன்றிணைப்பதே எனது முதல் வேலை"- சசிகலா பேட்டி!

10:24 PM Aug 10, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்த திண்டுக்கல் மாயத்தேவர் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09/08/2022) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சப்பட்டியைச் சேர்ந்த பெரிய கருப்பத்தேவர்- பெருமாயி தம்பதியர்களுக்கு அக்டோபர் 15, 1934- ஆம் ஆண்டு பிறந்தவர் மாயத்தேவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றிய போது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க வை தொடங்கிய போது திண்டுக்கல்லில் 1973- ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டார்.

அவர் தேர்ந்தெடுத்த இரட்டை இலை சின்னம் இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க.வின் சின்னமாக உள்ளது. அதன் பின்னர் 1980- ல் தி.மு.க.வில் இணைந்த பிறகும் உதயசூரியன் சின்னத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், வயது முதிர்வின் காரணமாக அரசியலை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சனைகளின் போது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (09/08/2022) மதியம் 12.00 மணியளவில் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். காலமான செய்திக் கேட்டு தி.மு.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், அ.தி.மு.க. எடப்பாடி அணியைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், மாயத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தேவர் பாதுகாப்பு இயக்கம் உட்பட தேவர் சமுதாய நிர்வாகிகள் தொடர்ச்சியாக, வந்து மாயத்தேவருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து, சசிகலா இன்று மதியம் மாயத்தேவர் இல்லத்திற்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணீருடன் இருந்த மாயத்தேவர் மனைவி சரஸ்வதியம்மாளை கையை பிடித்து ஆறுதல் கூறிய பின்பு வீட்டின் உள்ளே சென்று சரஸ்வதியம்மாளை அமரவைத்து நாங்கள் இருக்கிறோம்; கவலைப்படாதீர்கள். தமிழகத்தை ஆண்ட கட்சிக்கு சின்னத்தை தேடி தந்த வெற்றிவீரர் என்று பேசினார்.

அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறுகையில், "குக்கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் சின்னாளபட்டியில் இருந்து பாராளுமன்ற எம்.பி.யாக தேர்வு பெற்று, அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியின் தேர்தல் சின்னத்தைத்தேர்வு செய்த வெற்றி வீரர். அவர் வெற்றி பெற்றதால் தான் இன்றும், இரட்டை இலை அ.தி.மு.க.வின் சின்னமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் உயிருடன் இருக்கும்போது நேரில் வந்து பார்க்கலாம் என காத்திருந்த போது சுற்றுப்பயணங்களால் வர முடியவில்லை. நேற்று அவர் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. அ.தி.மு.க. இருக்கும்வரை மாயத்தேவரை மறக்க முடியாது" என்றார்.

அப்போது செய்தியாளர்கள் சசிகலாவிடம், எடப்பாடி அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மட்டும் வந்து பார்த்துள்ளார். மற்றவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை எனக் கேட்டதற்கு, அ.தி.மு.க. என்பது தனிப்பட்ட நபரின் கட்சி அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களின் கட்சி. ஏழைகளுக்காக அர்ப்பணித்த கட்சி. நானே வந்திருக்கிறேன்; வேறு என்ன சொல்ல வேண்டும். ஒரு கட்சியின் மூலம் பேரும், புகழும் அடைந்த அவர் நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிதான் என்று கூறியுள்ளார். அவர்களது கட்சியில் வேண்டுமென்றால் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செ ல்வம் இணையட்டும் என்கிறாரே என்று கேட்டபோது, அவரது பதிலுக்கு தொண்டர்கள் பதில் அளிப்பார்கள். தொண்டர்கள் முடிவு செய்யும் கட்சி தான் அ.தி.மு.க. வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் செய்கின்ற கடமையாக அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை என்றதோடு, நான் கடந்த 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். எல்லா அரசியல் சூழ்நிலையையும் பார்த்துள்ளேன். அ.தி.மு.க. பிளவுபட்டால், அது ஆளுங்கட்சிக்குதான் ஆதாயம் என்று கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், சின்னாளப்பட்டி சென்று மாயத்தேவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்பு மாயத்தேவர் மனைவி சரஸ்வதியம்மாளிடம், அவர் அ.தி.மு.க.வில் போட்டியிட்ட போது அவரை பார்த்து அரசியலுக்கு வந்தவன் நான். அவருடைய வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளேன். அ.தி.மு.க.வி ற்கு மிகப்பெரிய வெற்றிச் சின்னத்தை தேடிதந்த பெரியவர் அருமை அண்ணன் மாயத்தேவ.ர் இன்று நம்மை விட்டு பிரிந்தாலும், இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. கடைக்கோடி தொண்டன் இருக்கும் வரை, அவரது புகழ் நிலைத்திருக்கும் என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவரால் கிடைக்கப் பெற்ற இரட்டை இலை சின்னம்தான் என்றார். எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓ.பி.எஸ் இணைய வாய்ப்புள்ளதா? எனக் கேட்டபோது, இன்று அண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் வந்துள்ளேன். கட்சி நிர்வாகிகளை சந்திக்க தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறேன் என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT