Skip to main content

அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா சசி? எதிர்பார்ப்பும் அச்சமும்! - கட்சியினர் மனநிலை!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Sasikala

 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, 4 ஆண்டு சிறைவாசம் சென்ற சசிகலா விடுதலையாகி, பெங்களூருவிலிருந்து வழிநெடுக வரவேற்புடன் 23 மணி நேரம் பயணித்தார். சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மரியாதை செலுத்தி, தியாகராய நகரில் உள்ள வீட்டுக்கு சசிகலா சென்ற நிலையில், நாட்டு நடப்பு இனி எப்படி இருக்கும் என அ.தி.மு.க.வினரிடம் கேள்வி உள்ளது.

 

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க.வினர் கட்டம் கட்டப்பட்டனர். அ.தி.மு.க. கொடி பறக்க சசிகலா பயணிக்க கார் தந்தவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கிரேன் மூலம் ஆப்பிள் மாலை, செண்டை மேளம், பூரண கும்பம், சுவரொட்டிகள் என அமர்க்களம் ஒருபுறம். இன்னொருபுறம், போஸ்டர்களில் சசிகலா படத்தை மட்டும் கச்சிதமாகக் கிழிப்பது, கண்ணை நோண்டுவது போன்ற செயல்பாடுகள்.

 

என்னதான் நினைக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்?

 

‘தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. நாங்கள் சசிகலா ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறோம்..’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக விருதுநகர், செந்நெல்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் நால்வர், "தொண்டர்களைக் காக்கவரும் தியாகத் தலைவியே! வருக தாயே!'’ என்று தங்களது முகவரியோடு, அ.தி.மு.க. அடையாள அட்டைகளையும் போஸ்டரில் அச்சிட்டு ஒட்டியிருந்தனர். "அடிமட்டத் தொண்டராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக உருவாக்கியவரே சசிகலாதான்'’ என்று, அக்கட்சியின் தலைமைக்கும், போஸ்டரில் ‘செக்’வைத்தனர்.

Sasikala

 

இதுகுறித்து, விருதுநகர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர், “விருதுநகரில் நான்குபேர் முகத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்திவிட்டால், தமிழகத்தில் சசிகலாவுக்குப் பெரும்பாலானோர் ஆதரவு இருப்பதாக அர்த்தம் ஆகிவிடுமா? இதெல்லாம் லோக்கல் பாலிடிக்ஸ். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவி தனக்குக் கிடைக்காததால், ஒரு அணி சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான, ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதிக்குக் குடைச்சல் தந்தபடியே இருக்கிறார் ஒன்றிய கவுன்சிலரான செந்நெல்குடி மாரியப்பன். சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டியது அவருடைய மகன் செல்லப்பாண்டியும், அவருடைய ரத்த சொந்தங்களும்தான். இதையெல்லாம் பார்க்கும்போது, 1991 - 96ல் சசிகலாவும், அவரது பெயரைச் சொல்லி அந்தக் குடும்பத்தினரும் போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது.

 

எம்.ஜி.ஆர். இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களின் பெருவாரியான ஆதரவு அ.தி.மு.க.வுக்குக் கிடைத்தது. சசிகலா குடும்பத்தினர் தலையெடுத்தப் பிறகே, ஒரு சாதிக்கான கட்சி என்ற இமேஜ் ஏற்பட்டு, தலித் வாக்கு வங்கி எங்கெங்கோ சிதறிப்போனது. எம்.ஜி.ஆர். காலத்தில், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். பிறகு, முக்குலத்தோரான கே.கே.சிவசாமி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களெல்லாம் இங்கே மாவட்டச் செயலாளர் ஆனதற்கு, கட்சியை சசிகலா பின்னால் இருந்து இயக்கியதே காரணம். தற்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ‘ஓ.பன்னீர்செல்வம் பின்னுக்குத் தள்ளப்பட்டதும் கூட, ஒருவகையில் சரிதான். அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு சாதி ஆதிக்கம் ஏற்படுமோ என்பது, எங்கள் கட்சியில் உள்ள பிற சமுதாயத்தவர்களின் அச்சமாக, இப்போதும் இருக்கிறது'' என்றார்.

 

மாநில அளவிலான மற்றொரு நிர்வாகியோ தன் பெயரைத் தவிர்க்கச் சொல்லி கருத்து தெரிவித்தார். “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 டெல்டா மாவட்டங்களிலும், ஒன்பது தென் மாவட்டங்களில், கன்னியாகுமரி நீங்கலாக, தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் அனைத்திலும் தற்போது சசிகலா அலை வீசுவதாகவும், பொய்யான ஒரு பிம்பத்தை, திட்டமிட்டே உருவாக்கி வருகின்றனர்.

 

dddd

 

சசிகலாவுக்கு அப்படி எந்தவொரு செல்வாக்கும் இல்லை என்பதற்கு, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சான்றாக உள்ளன. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே, அ.தி.மு.க. கோட்டை என்று சொல்லப்படும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில், 53 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. வால் வெற்றிபெற முடிந்தது.

 

கோடிகளில் சொத்துகளைக் குவித்து, ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமாகி, சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, விடுதலையாகி வெளியில் வருபவரை, ‘தியாகத் தலைவி’ என்று, கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எப்படித்தான் சொல்ல முடிகிறதோ?'' என்று சீறலாக வெடித்தார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் நெமிலிகுப்பத்தைச் சேர்ந்த கருணாகரன், "நாங்க மீனவர்கள். எப்போ எம்.ஜி.ஆர். ‘படகோட்டி' படத்தில் எங்க கஷ்டத்தை வெளிப்படுத்தி நடித்தாரோ... அப்போவே பெரும்பாலான மீனவர்களின் மனதைப் பிடித்துவிட்டார். அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருக்காக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டோம். பின்னர் ஜெயலலிதா அம்மா தலைமையேற்றதில் இருந்து அம்மாவ நாங்க ஏத்துக்கிட்டோம். ஆனா அவுங்க மறைவுக்குப் பின்னாடி எடப்பாடி எப்படி முதல்வர் ஆனாருனு தெரியல. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்படல. இந்த நேரத்துல சசிகலா வந்தா எப்படி ஏத்துப்போம். அம்மா ஜெயலலிதாவையே என்ன செய்தாங்கனு தெரியல. அந்த மர்மமே விளங்கலை. இந்த சந்தேகம் இவுங்க மேல இருக்கு.''

 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரி, "சசிகலா வந்தாத்தான் நல்லது. இவ்வளவு நாளா அ.தி.மு.க.காரங்கள தட்டிக் கேட்கவோ, எதிர்த்து கேள்வி கேட்கவோ ஆளே இல்லை. அதனால இவுங்க வெக்கிறதுதான் சட்டமா இருந்துச்சு. எல்லாரோட முகத்திலும் இப்போ ஒரு பயம் தெரியுது. மாத்தி மாத்தி பேசியாவது, ஜெயலலிதாம்மா சாவு மர்மம் வெளி உலகத்துக்குத் தெரியுதானு பார்ப்போம்.''

 

கிண்டி பட்ரோட்டைச் சேர்ந்த ரமணி, "நான் அ.தி.மு.க.காரிதான். ஆனா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவ ஏத்துக்கலாம். சசிகலா யாரு..?''

 

திருப்போரூரைச் சேர்ந்த சிவராமன், "இது மேலிடத்து விவகாரம். சசிகலா வருகையினால் அ.தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்புமில்லை. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள்னு வரவேற்புக்குக் கூட யாரும் செல்லவில்லேயே..? ஒருவரும் அ.ம.மு.க.வில் சேரவில்லையே! எடப்பாடியின் சிறப்பான ஆட்சி தொடரும்.''

 

ஓ.எம்.ஆர் சாலை நாவலூரைச் சேர்ந்த ரகு, "நான் மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன்.''

 

ரகுவைப் போலவே அ.தி.மு.கவில் பொறுப்பில் உள்ள பலரும் சட்டென தொடர்பைத் துண்டித்தனர். “எங்க தலையைப் போட்டு உருட்டாதீங்க. அவங்களே ஒரு முடிவு எடுத்துட்டு வரட்டும்'' என்று சொன்னவர்கள் அதிகம். சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், அவர் எதுவும் செய்வார் என்ற அச்சம் கலந்த உணர்வும் அ.தி.மு.க.வினரிடம் தெரிகிறது.

 

 

Next Story

'பாஜகவிற்கு ஜால்ரா அடிக்கும் அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை'-புகழேந்தி பேட்டி

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'AIADMK workers don't need to beat Jalra for BJP'-pugahendi interview

பாஜகவிற்கு ஜால்ரா அடித்து அவர்களின் கால்களில் விழக்கூடிய அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு பெங்களூர் புகழேந்தி  இன்று ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு வருகை தந்தார். இன்று ஜூலை 21 ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவை பெற்று உணவகத்தில் சாப்பிட்டார். அதேபோல் அவருடன் வந்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களும் அங்கு உணவு உண்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி பேசுகையில், 'தமிழகத்தில் காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தேன், பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் ஆரம்பித்தார், எம்ஜிஆர் சத்துணவு வழங்கினார். அதனை மெருகூடியவர்  ஜெயலலிதா. அந்த வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை செய்தார்கள் என பாராட்டினேன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று 21 கோடி ரூபாயை மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளார். இதனை பாராட்டுக்குரிய விஷயமாக நாங்கள் பார்க்கிறோம்.

எங்களை பொறுத்தவரையில் நல்லவைகளை செய்யும்போது பாராட்டுகிறோம். அது மக்களுக்கு எதிராக திரும்பும் போது அதனை எதிர்க்கிறோம், அந்த வகையில் 21 கோடி ரூபாயை அம்மா உணவகத்திற்கு ஒதுக்கிய முதலமைச்சரை மனப்பூர்வமாக பாராட்டுகிறோம் என தெரிவித்தார். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி  அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை, ஆட்சியில் இருந்தார், போனார், உணவு பொருள்களில் ஊழல் செய்தார் என வழக்கு தொடர்ந்தேன். வழக்கு மன்றத்தில் உள்ளது. இதுதான் அவரது சாதனை. எந்த நிதியையும் அம்மா உணவகத்திற்கு ஒதுக்காமல் ஏமாற்றி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒதுக்கியவர் ஸ்டாலின் எனவே இரண்டையும் சொல்லியாக வேண்டும். ஜெயலிதாவை நினைவில் நிறுத்தி அவர்கள் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யுங்கள். பெரும் அளவில் பெருமை செய்யுங்கள்.இந்தத் திட்டம் தொடர பல கோடி ரூபாயை நிதி ஒதுக்கி அம்மா உணவகங்களை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

'AIADMK workers don't need to beat Jalra for BJP'-pugahendi interview

மின் கட்டண உயர்வு என்பது தொடர்ந்து காலம் காலமாக இருந்தாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்,. அதனை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள். முதலமைச்சர் அதனை பரிசீலனை செய்து மின் கட்டணத்தை குறைப்பதற்கு முடிவெடுத்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்றார். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு எதையும் செய்யாதா, பிரதமர் மோடி எதையும் செய்ய மாட்டாரா, பாரதப் பிரதமரின் நாற்காலி ஆட்டத்தில் உள்ளது. அது நிரந்தரமான நாற்காலியாக இல்லை, 60 சீட்டுகள் தான் வித்தியாசமாக உள்ளது. மத்திய அரசின் ஆட்சி நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் கையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்த நாற்காலியை அவர்கள் தள்ளி விடுவார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவேன் என துடித்த பிரதமருக்கு கிடைத்த நீதி தான் தற்போது முடிந்த தேர்தல், 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் வலுப்பெற்றுள்ளது. ஜனநாயகம் தலைத்தோங்கி உள்ளது.

பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியும் நினைத்ததை செய்ய முடியாது. அது நடக்கவே நடக்காது என்ற நிலைப்பாடு இப்போது எழுந்துள்ளது. நாங்கள் அதிமுக கொடி பிடித்து அம்மாவின் புகழை சொல்லி வளர்ந்தவர்கள் நாங்கள் பாஜக மற்றும் மோடி அவர்களை ஒரு கட்சியாக பார்க்கிறோம், ஆனால் ஜால்ரா அடித்து அவர்களின் கால்களில் விழக்கூடிய அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என தெரிவித்தார்.

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அதிமுக கவுன்சிலர்; எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
EPS action on AIADMK councilor involved in Armstrong incident case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.