ADVERTISEMENT

பிரசாத் ஸ்டூடியோவில் ஒருநாள் தியானத்துக்கு அனுமதி கோரி இளையராஜா வழக்கு!- ஸ்டூடியோ நிர்வாகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

03:06 PM Dec 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு நாள் தியானம் செய்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஸ்டூடியோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய ரிக்கார்டிங் தியேட்டராகப் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், அவ்விடத்தை வேறு தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், இளையராஜாவை அந்த இடத்திலிருந்து காலி செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தியது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு தற்போது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான்,‘இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அந்த ஸ்டூடியோவுக்குச் சென்று, ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அங்கு, தான் கைப்பட எழுதி வைத்துள்ள இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்கு கிடைத்த அவார்டுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு, ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, இன்று (18/12/2020) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டூடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர், ஸ்டூடியோ இருந்த இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், அவருடைய உடமைகள் அனைத்தும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். எனினும், தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

‘எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில், ஸ்டூடியோ இடத்தில் இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா, இல்லையா என்பதைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையிலும், நீண்ட நாள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஏன் இசையமைப்பாளர் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அது குறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT