ADVERTISEMENT

மின்விளக்கு இல்லாத கோவிலுக்காக 4560 அடி மலை ஏறிய எம்.பி.! 

04:35 PM Jan 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் தாலுக்காவில் அமைந்துள்ளது பர்வதமலை. ஜவ்வாதுமலையின் ஒரு பகுதி இது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் உயரம் 2668 அடி உயரம். அதைவிட சுமார் 2 ஆயிரம் அடி கூடுதல் உயரமானது பர்வதமலை. 4560 அடி உயரம் உள்ள பர்வதமலை உச்சிக்கு செல்வது என்பது சிரமமானது.

பர்வதமலை உச்சிக்கு செல்ல கிழக்கு பகுதியில் கடலாடி என்கிற கிராமத்தின் வழியாக ஒரு பாதையும், தென்மாதிமங்களம் என்கிற கிராமம் வழியாக ஒரு பாதை என இரண்டு பாதையுள்ளது. கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடமலை, புற்றுமலை, கோவில் மலை என்கிற பகுதிகளை கடந்தால் மட்டுமே மலை உச்சியை அடைய முடியும். இரண்டு மலைப் பாதைகளும் பில்லர் ராக் என்கிற இடத்தில் இணைகின்றன. மலை உச்சிக்கு 700 மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடம், ஒருபாறையின் செங்குத்தான வழிப்பாதை. பாறையில் 5 அடிக்கு ஒரு கடப்பாரை வைக்கப்பட்டுள்ளது, அதனை பிடித்துக்கொண்டுதான் மேலே ஏற முடியும். இந்த இடம் பக்தர்கள் 90 சதவிதம் பேரை பயம் கொள்ளவைக்கிறது என்பதால் இரவு பயணத்தை மேற்கொள்ளச்சொல்கிறார்கள். பலயிடங்களில் சறுக்கினால் மரணம் என்கிற வகையில் உள்ளது பாதை. அப்படிப்பட்ட மலைக்கு நூற்றுக்கணக்கான வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் தினமும் வருகிறார்கள். அம்மாவாசை இரவிலும் மின்விளக்கு வெளிச்சம் தேவைப்படாத அளவுக்கு இந்த பாதை இருக்கும் என்கிறார்கள் தொடர்ந்து மலையேறும் பக்தர்கள். மலை உச்சியில் மட்டுமல்ல வழியில் கூட குடிக்க தண்ணீர் வசதி கூட கிடையாது என்கிறார்கள்.

இவ்வளவு கடினப்பட்டு மேலே எதற்காக செல்ல வேண்டும்?


மலை உச்சியில் இருபதுக்கு இருபது அளவுள்ள மல்லிகார்ஜினர் கோவில் உள்ளது. கர்ப்பகிரகத்தில் லிங்கமாக மல்லிகார்ஜினர் உள்ளார். தூரமாக இருந்து பார்க்கும்போது உயரமான லிங்கமாக காட்சியளிக்கும், அதுவே கருவறைக்குள் சென்று பார்க்கும்போது ஒருஅடிக்கும் குறைவான உயரமுள்ளது இந்த லிங்கம். அதேபோல் மீண்டும் வெளியே வந்து பார்த்தால் உயரமாக இருப்பதுப்போல் தெரியும் வகையில் கருவறையும், லிங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜினர் உடன் பிரமராம்பிகைதேவி சன்னதியும் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகர் என தனியே யாரும் கிடையாது. சுவாமியை இந்த சாதிக்காரன் தொட்டால் தீட்டு, அந்த சாதிக்காரன் உள்ளே வரக்கூடாது, கருவறை எங்களுக்கு மட்டுமே சொந்தம் என உரிமைக்கொண்டாடும் சாதி பிரிவினை இங்கு கிடையாது. பக்தர்கள் ஒவ்வொருவரும் அர்ச்சகர் தான். மலையேறி செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவரும் சுவாமி சிலையை தொட்டு அலங்காரம் செய்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்வதே இதன் சிறப்பு.

பௌர்மணி மற்றும் அம்மாவாசை இரவில் மலை உச்சியில் தங்க பலரும் விரும்புகிறார்கள். காரணம் இரவு 12 மணி என்பது சித்தர்கள் பூஜை செய்யும் நேரம் என்பதால் அந்த நேரத்தில் சுவாமிக்கு பூஜை செய்தால் நினைத்தது நடக்கும் என்கிற நம்பிக்கையால் பலரும் அந்த நேரத்தை விரும்புகின்றனர். ஆனால் மலை உச்சியில் அதிகபட்சமாக 500 பேருக்கு மேல் இருக்க முடியாத நிலை. எப்போதாவுது கருடன் பறந்து வந்து ஒரே இடத்தில் அந்தரத்தில் 15 நிமிடம் பறக்கிறார் என்கிறார்கள்.

மலை ஏற முடியாதவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருவதுப்போல் பருவதமலையையும் பக்தர்கள் வலம் வர துவங்கியுள்ளார்கள். 26 கி.மீ சுற்றளவுள்ள இந்த மலையை சுற்றிவந்தால் கைலாயத்தை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்கிறது தலபுராணம். இந்த கிரிவலப்பாதையும் கடினமான பாதை என்கிறார்கள். காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகர் தான் முதல் முறையாக 60 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலம் வந்தார் என்கிறார்கள். சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து தமிழகம் வந்தபோது அவரின் பாதம் பதிந்த இடம் பர்வதமலை என்கிறார்கள். அதனாலயே கடவுள் + அடி = கடவுளடி என மலை அமைந்துள்ள கிராமத்துக்கு பெயர் வந்தது. அதுவே பின்னர் கடலாடி என பெயர் மாறியது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். மலைபடுகடாம் என்கிற நூலில் இம்மலையை பற்றி பாடப்பட்டுள்ளது. இதனால் இதனை தென்கயிலாயம் என அழைக்கிறார்கள். தமிழகத்தில் சதுரகிரி, வெள்ளியங்கிரி என இன்னும் இரண்டு இடங்களையும் இதைப்போல் தென்கயிலாயம் என அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கையிலை சென்று வணங்க முடியாதவர்கள் பர்வதமலை வந்து வணங்கினால் அனைத்து பலன்களும் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த அண்ணாதுரையிடம், பர்வதமலை பகுதியை மேம்படுத்திதர வேண்டும், மலை உச்சியில் கோவிலுக்கு மின் விளக்கு அமைத்து தரவேண்டும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை அப்பகுதி மக்கள் வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 7ஆம் தேதி கட்சி நிர்வாகிகள் சிலருடன் 4560 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு ஏறி சென்று அங்குள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில், மௌனம்யோகி விடோபானந்தா ஆசிரமத்துக்கு 40 சோலார் மின்விளக்குகள் அமைத்துக்கொடுத்து மேலே செய்யவேண்டியது இன்னும் என்னவுள்ளது என ஆராய்ந்துக்கொண்டு திரும்பி வந்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT