Skip to main content

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Chief Minister opens flyover at Thiruvannamalai

 

திருவண்ணாமலை, வேலூர், சென்னை என தமிழ்நாட்டில் 9 இடங்களில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம்ங்கள், சாலை மேம்பாலங்கள் போன்றவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, இன்று (07/04/2022) காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். இந்த மேம்பாலங்கள் திறக்கப்பட்டதன் மூலமாக சம்மந்தப்பட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பொதுமக்கள் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மேம்பாலங்கள் திறக்க நாங்கள் தான் காரணம், எங்களுக்கு பயந்துக்கொண்டே உடனடியாக மேம்பாலங்கள் திறக்கப்பட்டன, இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியென திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கூறிவருகின்றனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் என்பது கிராமங்கள் நிறைந்த மாவட்டம். மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை நகருக்கு தினமும் லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வருகின்றனர். திருவண்ணாமலையில் பிரபலமான அண்ணாமலையார் கோயில் இருப்பதால் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகிறார்கள். திருவண்ணாமலை நகரத்துக்குள் வருவதற்கு 9 சாலைகள் உள்ளன. இதில் பெங்களுரூ சாலை, வேலூர் சாலை, சென்னை சாலை போன்றவை 24 மணி நேரமும் பிஸியாகவே இருக்கும்.

 

திருவண்ணாமலை நகரில் இருந்து சென்னை செல்லும் அண்ணாசாலையில் நகரப்பகுதியிலேயே ரயில்வே கிராஸிங் உள்ளது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படும். அப்போது இருப்புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் திருவண்ணாமலை டூ சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை.

 

2015- ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் 39 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேம்பால கட்டுமான பணி தொடங்கியது. கட்டுமான பணி தொடங்கியபோது, திருவண்ணாமலை டூ சென்னை, திருவண்ணாமலை டூ விழுப்புரம், திருவண்ணாமலை டூ திருக்கோவிலூர், பெங்களுரூ டூ பாண்டிச்சேரி செல்லும் வாகனங்கள் பாதை மாற்றிவிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சுமார் 5 கி.மீ முதல் 7 கி.மீ வரை சுற்றிக்கொண்டு நகரத்துக்கு வந்து சென்றார்கள்.

 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், இந்த மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்மென பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு, மூன்று முறை களஆய்வு செய்து பணிகளைத் தூரிதப்படுத்தினார். 2022- ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் திறப்புவிழா செய்யப்படாமல் இருந்தது. நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலால் நொந்துபோகும் மக்கள், ஆட்சியாளர்களை திட்டிக்கொண்டே செல்கிறார்கள் என கடந்த மார்ச் முதல் வாரம் நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டுயிருந்தோம்.

 

மார்ச் மாத இறுதியில் மேம்பாலத்தை திறக்கவேண்டும் இல்லையேல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. அறிவித்தது. ஏப்ரல் 7- ஆம் தேதி காலை தலைமைசெயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார் என ஏப்ரல் 6- ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாங்கள் போராட்டம் நடத்துவோம் என அறிவித்ததாலே தமிழ்நாடு அரசு பயந்துக்கொண்டு உடனடியாக திறந்தார்கள் என பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள்.

 

உண்மையா இது என அதிகாரிகளிடத்தில் நாம் கேட்டோம், கொரோனாவால் கடந்த 24 மாதங்களாக பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுயிருந்தது, கடந்த மார்ச் மாதம் தடைவிலக்கப்பட்டதும் பௌர்ணமியன்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தார்கள். வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி சித்திரா பௌர்ணமி வருகிறது. சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலை நகருக்கு கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. மேம்பாலம் திறக்காததால் போக்குவரத்து நெரிசலால் நகரம் தத்தளிக்கிறது. பௌர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும். போக்குவரத்து சிக்கலை ஓரளவு குறைக்க வேண்டும் என்றால் வாகன போக்குவரத்துக்காக மேம்பாலத்தை திறக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

 

அதன் அடிப்படையிலேயே நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ.வேலுவிடம் இதுப்பற்றி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்பாலம் திறக்காததால் மக்கள் அதிருப்தியில் இருக்கும் தகவல் போன்றவை அவருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுயிருந்தது. உளவுத்துறை மூலமாக பாலம் குறித்த மக்களின் கருத்து முதலமைச்சருக்கு சென்றது. இந்த காரணங்களாளே உடனடியாக மேம்பாலம் திறக்கப்பட்டது" என்றனர். 


 

சார்ந்த செய்திகள்