ADVERTISEMENT

“சினிமா நடிகர்கள் நிஜமான ஹீரோக்கள் அல்ல” - நடிகர் தாமு விழிப்புணர்வு 

12:22 PM Sep 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 'கல்வியில் காவல்துறை', 'போதை ஒழியட்டும் - பாதை ஒளிரட்டும்' என்ற நிகழ்ச்சி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சீடர் நடிகர், டாக்டர் தாமு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரது உரையில், “ஆசிரியர்கள் எங்கும் மாணவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. மாணவர்களை திருத்தி தீபமாக மாற்றுகிறவர்கள் தான் ஆசிரியர்கள். அரசு நிதி ஒதுக்கி, இலவசமாக சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்குகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சினிமா நடிகர்கள் நிஜமான ஹீரோக்கள் அல்ல. உங்கள் தந்தை தான் நிஜமான ஹீரோ. சினிமா நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள்.

அம்மா உங்களை கருவறையில் சுமந்தார். ஆசிரியர் உங்களை வகுப்பறையில் சுமக்கிறார். வாழ்க்கையில் சுமோக்கிங், டிரிங்கிங் ஆகிய 2 கிங்கை வெளியேற்றினால் நீங்கள் கிங்காக இருப்பீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றினால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 33-வது இடத்தில் உள்ளது. அதை நீங்கள் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் தான் உண்மையான சாம்பியன். இதை நீங்கள் உணர வேண்டும். போதையின் பாதையில் மாணவர்கள் சென்று விடக்கூடாது. செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள். அதில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்-அப், யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதில் இருந்து வெளியே வாருங்கள். ஏராளமான புத்தகங்களை படியுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேலும் 'போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்' என்ற தலைப்பில் நடிகர் தாமு, “மாணவர்களாகிய நீங்கள் உங்களது பெற்றோர்களை எப்படி நடத்துகிறீர்கள். அவர்கள் எப்படி கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து, ஆளாக்கி இருக்கிறார்கள் என்பதை குழந்தை பிறப்பு முதல் படிக்க வைத்து வருவது வரை” தத்ரூபமாக விளக்கி பேசினார். இதை கேட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் தேம்பி தேம்பி அழுதனர். ஆசிரியர்களும், போலீசாரும் கண் கலங்கியதை காண முடிந்தது. இதற்கிடையில் மாணவர்கள் அழும் - வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12 படிக்கும் 22 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு, துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, சபியுல்லா, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT