/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1105.jpg)
கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகில் உள்ளது பெலாந்துறை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார், வயது 20. கூலித் தொழிலாளியான இவர், கிளிமங்கலம் கிராமத்திலுள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் வேலை செய்துவருகிறார். பொதுவாக செங்கல் சூளையில் செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்,இரவு நேரங்களில் மின்சார விளக்கு வெளிச்சத்தில் செங்கல் தயாரிக்கும் தொழிலை விடிய விடிய செய்துவருவார்கள். விடிந்த பிறகு காலை உணவு முடித்து பகலில் தூங்குவது வழக்கம்.
இப்படி பகலில் தூங்கி இரவில் செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவந்தபாலகுமார், தனது பணிகளை முடித்துவிட்டு நேற்று (16.05.2021) அதிகாலை அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதியில் காலைக்கடன் கழிப்பதற்காக சென்றுள்ளார். திடீரென அவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்துவிட்டு கூறியுள்ளனர். இதையடுத்து பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். அங்கு பிணமாக கிடந்த பாலகுமாரன் கால்களில் ரத்தக்காயம் இருப்பதைப் பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் விருத்தாச்சலம் டி.எஸ்.பி. மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலகுமாரன் உடலையும் அவர் இறந்து கிடந்த இடத்தையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில்,பாலகுமார் நேற்று அதிகாலை செங்கல் வேலை முடித்துவிட்டு அப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச்சென்றவர், கை கால்களைக் கழுவுவதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு அருகிலுள்ள பம்புசெட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வனவிலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு சட்டவிரோதமான முறையில் விளைநிலத்தில் உரிமையாளரால் மின்வேலி அமைக்கப்பட்டு, அந்த மின்வேலியில் தவறுதலாக சிக்கி பாலகுமார் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சட்டவிரோதமான முறையில் மின்சார வேலி அமைத்த அந்த நிலத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவுசெய்ய தயாராகி வருகின்றனர். இதையடுத்து பாலகுமாரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மின்சார வேலியில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பது பல மாவட்டங்களில் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)