ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையங்கள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு; துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

01:01 AM Feb 21, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், இடைப்பாடி, தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது.

இதற்காக 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சராசரியாக 64.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. நகராட்சிகளில் 76.61 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாவட்ட சராசரி வாக்குப்பதிவு 70.54 சதவீதமாகவும் இருந்தது.

காலை 07.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 06.00 மணிக்கு முடிந்தது. மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை அதாவது கடைசி ஒரு மணி நேரம் மட்டும், கரோனா நோயாளிகள் மட்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், சேலம் மாவட்டத்தில் அந்த குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில ஒரு கரோனா நோயாளி கூட வாக்கு செலுத்த வரவில்லை.

வாக்குப்பதிவு முடிந்த உடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கட்சி முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இவிஎம் இயந்திரம், பேலட் இயந்திரங்களை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அந்த பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சேலம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. மாநகராட்சி முழுவதும் 709 வாக்குச்சாவடிகளில் இருந்து இவிஎம் இயந்திரங்கள் அந்த மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள 8 ஸ்ட்ராங்க் ரூமில் வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி வாரியாக, இயந்திரங்களை அடுக்கி வைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) அதிகாலையில் நிறைவடைந்தன.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாத்துரை, மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங்க் ரூம்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா தலைமையில் துணை ஆணையர்கள் மோகன்ராஜ், மாடசாமி ஆகியோர் மேற்பார்வையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் அறை முன்பும், அந்த கட்டடத்தைச் சுற்றிலும், கல்லூரியைச் சுற்றிலும் என தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணியில் காவல்துறை உதவி ஆணையர்கள் சரவணக்குமார், கதிரவன், 6 காவல் ஆய்வாளர்கள், 50 எஸ்.ஐ.க்கள் உள்பட 75 காவல்துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோல் ஆத்தூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் அடங்கிய இவிஎம் இயந்திரங்கள், வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. நரசிங்கபுரம் நகராட்சியில் பதிவான வாக்குகள் கொண்ட இவிஎம் இயந்திரங்கள் ஜெஜெ நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் நகராட்சியில் பதிவான வாக்குகள், மாதையன்குட்டை எம்ஏஎம் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், இடைப்பாடி நகராட்சியில் பதிவான வாக்குகள்¢ அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், இடங்கணசாலை நகராட்சியில் பதிவான வாக்குகள் பெருமாகவுண்டன்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மையத்திலும், தாரமங்கலம் நகராட்சியில் பதிவான வாக்குகள் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி மையத்திலும் எண்ணப்படுகின்றன. வாக்குகள் பதிவான இவிஎம் இயந்திரங்கள், மேற்சொன்ன மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல 31 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் கொண்ட இவிஎம் இயந்திரங்களும் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகள், கட்சி வேட்பாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளன.

நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மட்டும் 15 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தலைமையில் 1200 காவல்துறையினர் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். முறைகேடுகள், குற்றச்செயல்களை தடுக்க அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தேர்தல் அதிகாரிகள் வெப் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 22) எண்ணப்படுகின்றன. காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகின்றன.

வேட்பாளர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங்க் ரூம்கள் திறக்கப்பட்டு, ஒவ்வொரு இவிஎம் இயந்திரமும் எடுத்து வரப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் எண்ணும் பணிகள் நடைபெறும். பகல் 12.00 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT