ADVERTISEMENT

தேர்தலுக்குப்பின் சும்மா இருப்பார் மோடி! தமிழாசிரியரை அனுப்பிவைப்பார் ஸ்டாலின்!-விருதுநகரில் கனிமொழி எம்.பி.

11:01 PM Apr 04, 2024 | kalaimohan

விருதுநகர் தொகுதியின் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரை ஆதரித்து விருதுநகரில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி கேள்வி எழுப்பினார் என்பதற்காக, எத்தனை தடவை இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பதற்குக் கணக்கே கிடையாது. அதானி - மோடி தொடர்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதன் காரணமாக ராகுல் காந்தியை இடைநீக்கம் செய்தனர். மதத்தால் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, இந்தியாவை பிளவுப்படுத்திப் பார்க்க நினைக்கிறது பாஜக. தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்குப் பிடிக்காது. நம்மிடம் இருந்து மொத்தமாகச் சுருட்டிச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

இங்கு ஆளுநர் ஒருவர் இருக்கிறார். அவர் பாஜகவுக்கு ஒரு படி மேல். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கனார், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 75 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த ஆளுநர் யார், நம் மாநிலத்திற்கு தமிழகம் என்று பெயர் வைப்பதற்கு? இவர் அதிகாரியாக இருந்தவராம். இன்னொரு அதிகாரி வேறு இருக்கிறார். அவர் கர்நாடகாவில் பணியில் இருந்தபோது என்னைத் தமிழன் என்று சொல்லாதீர்கள். நான் இறுதிவரை கர்நாடியன் என்று கூறினார். அப்படிச் சொன்னவர் கோவை தொகுதியில் நிற்கிறார். கர்நாடகாவில் எங்காவது நிற்க வேண்டியதுதானே? அதிகாரிகளை எல்லாம் அரசியல் செய்வதற்கு தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது பாஜக.

ADVERTISEMENT

மாணிக்கம் தாகூருக்கு ஹிந்தி தெரியும். எனக்குத் தெரியாது. நான் தமிழில் கேள்வி கேட்டால், ஹிந்தியில் பதில் வரும். நான் யாரைத் தேடிச் சென்று கேட்பது? நாங்கள் மக்கள் பிரச்சனையைத்தானே பேசுகிறோம். எனக்குப் புரியாத மொழியில் பதில் கொடுத்தால் அது இந்தித் திணிப்பு இல்லையா? இதுதான் இந்த நாட்டின் மொழி என்று இந்தியைத் திணித்துக்கொண்டிருந்தீர்கள். தேர்தல் வந்தவுடன் திடீரென்று தமிழ் மீது பிரதமருக்குப் பற்று வந்துவிட்டது. பற்று வந்தவுடன் நான் தமிழனாகப் பிறக்கவில்லையே. தமிழ் படிக்கவில்லையே, தெரியவில்லையே, தமிழ் பேசத் தெரியவில்லையே, எழுதத் தெரியவில்லையே என்று கூறுகிறார்.

ஒன்றும் கஷ்டம் இல்லை. தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி ஃப்ரீயாகத்தானே இருப்பார். அப்போது தமிழ்நாடு முதல்வர் அவருக்கு நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பிவைத்து தமிழ் கற்றுக் கொடுப்பார். தமிழ் கற்றுக்கொண்ட பிறகாவது, தமிழர்களின் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதமர் மோடி புரிந்து கொள்வாரா என்று பார்ப்போம். நாம் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதோ, தேர்தலுக்கு முன்போ, எப்போதாவது பிரதமர் தமிழ்நாடு வந்திருக்கிறாரா? ஒரு வாரத்திற்குள் தேர்தல் என்றவுடன், ஐந்துக்கும் மேற்பட்ட முறை தமிழ்நாடு வந்தார். தற்போது மீண்டும் தமிழ்நாடு வரவிருக்கிறாராம். அவர் எத்தனை முறை வந்தாலும் ஒரு பயனும் இல்லை.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதி, நாம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். நம்மைப்போல், காங்கிரஸ் கட்சியும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும். நாம் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு விலை ரூ. 500 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும், டீசல் விலை ரூ.65 ஆகவும் குறைக்கப்படும்.” என்று பரப்புரை செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT