ADVERTISEMENT

“இந்தியாவை காப்போம்.. இந்திய மக்களை காப்போம்” - 5 மொழிகளில் ஸ்டாலினின் குரல்

05:43 PM Sep 04, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம் என இந்தியாவிற்காக பேசுவோம் (Speaking for INDIA) என்ற தேசிய அளவிலான பாட்காஸ்ட் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

இந்தியாவிற்காக பேசுவோம் (Speaking for INDIA) என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த ஆடியோ ரி​லீஸாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், “பாஜக இதுவரை கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குஜராத் மாடல் என்று சொல்லிய நரேந்திர மாடல் மக்களை ஏமாற்றிவிட்டது. பாஜக ஆட்சி என்ன மாடல் என்றே சொல்ல முடியவில்லை. பொதுத்துறை மாடல்களை சீரழித்து சின்னாபின்னம் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை மோடி முடக்கிவிட்டார். தனது நண்பர்களின் தொழில்களை வளர்த்துவிடுவதில் மோடி கவனமாக இருக்கிறார். மோடி ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. திராவிட மாடல் பற்றி நாம் பேசியதும் குஜராத் மாடல் பற்றி அவர்கள் பேசுவது இல்லை. ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் விற்கப்பட்டுவிட்டன. உழவர்கள் வருமானம் குறைந்துவிட்டது. விலைவாசி உச்சத்தில் உள்ளது. இதை எல்லாம் மறைக்கவே மதவாதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. 2002ல் குஜராத்தில் பாஜக செய்த கலவரம்தான் இதற்கு ஆணிவேர். அது தற்போது மணிப்பூருக்கும் பரவி உள்ளது. பாஜகவால் இந்தியாவிற்கே ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மக்களுடைய மத உணர்வுகளை தூண்டி அதில் குளிர்காயப் பார்க்கிறார். பாஜக விதைத்த வெறுப்பு விதை இப்போதும் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்பாவி மக்களை இது காவு வாங்குகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

இந்தியாவிற்கு ஆபத்து வரும் போதெல்லாம் முன்னணி படையாக திமுக நின்றுள்ளது. இதைத்தான் அண்ணாவும் சட்டசபையில் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்தியாவிற்கான கட்சியாக திமுக இருக்க வேண்டும் என்று அண்ணா சொல்லி இருக்கிறார். அதை அண்ணாவும், கலைஞரும் செய்து காட்டி இருக்கிறார்கள். பிரதமர்களை, குடியரசு தலைவர்களை உருவாக்கிய இயக்கம் திமுக. இப்போது மீண்டும் பெரிய கடமை நம் முன் உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜக ஆட்சியில் மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நசுக்க பார்க்கிறது பாஜக.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஏகப்பட்ட நிதிகளை வாரி வழங்கியவர்கள், தமிழ்நாட்டிற்கான நிதியை குறைத்துள்ளனர். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது. இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம்; காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. இதை எல்லாம் தடுக்கவே இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தியாவை காக்கவே இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தியாவை நாங்கள் இதன் மூலம் காப்போம். இந்தியாவை காப்போம்.. இந்திய மக்களை காப்போம்” என்று கணீர் குரலில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT