ADVERTISEMENT

சேலம் அரசு மருத்துவமனையில் வருகிறது புற்றுநோய் சிகிச்சை மையம்!

06:21 PM Mar 05, 2020 | Anonymous (not verified)

சேலம் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் செலவில் விரைவில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வருடன் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்தார். புதன்கிழமை (மார்ச் 4) இரவு, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு சிகிச்சை பிரிவுக்குச் சென்ற அவர், பிரசவ விவரங்கள், சிகிச்சைக்காக வந்து செல்வோரின் பதிவேடுகளை பார்வையிட்டார். அதையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்புப்பிரிவை பார்வையிட்டார். அங்குள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "சேலம் அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 35 பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழப்புகள் நிகழாவண்ணம் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இம்மருத்துவமனையில், 20 கோடி ரூபாயில் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது, 1.60 கோடி ரூபாய் மதிப்பில் நவீன சி.டி. ஸ்கேன் உபகரணம் வழங்கப்பட்டு உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதி இல்லை என்று பலர் கூறினர். ஆனால், இதுவரை இங்கு 4 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாகச் செய்து முடித்துள்ளனர். அதற்குத் தேவையான வசதிகள் மேலும் செய்து கொடுக்கப்படும்.

இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. தேவையான அளவு மருந்து, மாத்திரை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரைவில் ஒரு குறும்படம் வெளியிட இருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் தொற்று பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்" என தெரிவித்தார்.

ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT