ADVERTISEMENT

“வீட்டுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளனர்..” - அமைச்சர் செந்தில் பாலாஜி

02:55 PM May 26, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “இந்த சோதனை என்பது எங்களுக்கு புதியது அல்ல. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது இதுபோன்று வருமான வரித்துறை சோதனையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தற்போது எனது இல்லம் தவிர என் சகோதரர் இல்லம், அவருக்கு தொடர்புடையோர் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று சோதனை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வருமான வரியை சரியாக கட்டி வருபவர்கள். குறிப்பாக விரும்பத்தகாத நிகழ்வு நடந்தவுடனேயே நிர்வாகிகளை தொடர்புகொண்டு, சோதனை நடைபெறும் இடத்தில் யாரும் இருக்கக்கூடாது. சோதனைக்கு முழுமையாக ஒத்துழையுங்கள் என்று தெரிவித்துள்ளேன்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து அனைவரும் கிளம்பிச் சென்றுள்ளனர். அவர்கள் என்ன ஆவணம் கேட்டாலும் தருவதற்கு தயாராக உள்ளோம். எத்தனை நாட்கள் நடந்தாலும், முழுமையான ஒத்துழைப்பு தரவும் தயாராக இருக்கிறார்கள். தம்பி மட்டும் வீட்டில் இல்லை. அவரது வீட்டில் ஆள் இருக்கிறார்கள். வருமான வரித்துறை சோதனைக்கு சென்றவர்கள் அதிகாலை சென்றுள்ளனர். பெல் அடித்து கதவை திறக்க சற்று நேரம் கூட பொறுத்திருக்காமல் வீட்டின் சுவரை ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். அந்த வீடியோ எனக்கு வந்திருக்கிறது.

எனக்கு வந்த தகவலின்படி 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. முறையான தகவல் தரவில்லை என எங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை சோதனையில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கட்டும். மாறாக சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. 2006ல் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது என்ன சொத்து விவரங்களை தாக்கல் செய்தேனோ, அதில் ஒரு சொத்தை தற்போது விற்பனை செய்துள்ளேன். 2006 முதல் இன்றுவரை நானோ, என் சகோதரரோ, தாயோ, தந்தையோ யாருடைய பெயரிலும் ஒரு சொத்தைக் கூட வாங்கவில்லை. இனியும் வாங்கமாட்டோம்.

சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியே வந்தது. அதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் தம்பி மனைவியின் தாய் அவரது மகளுக்கு ஒரு இடத்தை தானமாக கொடுக்கிறார். அந்த இடத்தில் தான் வீடு கட்டுவதாக சொல்லப்படுகிறது. அவர் தனது மகளுக்கு சொத்தை தருவதில் என்ன தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT