Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Income Tax Department raids Minister Senthilbalaji's house

 

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

 

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டி பகுதியில் 25 இடங்களிலும், கரூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பாலக்காடு, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கினார் எனும் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெறலாம் எனச் சொல்லப்படுகிறது. 

 

சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றார். இதனை உச்சநீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரூ.100 கோடி சொத்தை அபகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்; பரபரப்பு புகார்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Complaint that Mr. Vijayabaskar has usurped land worth Rs.100 crores

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ். இவர் நமக்கல் மற்றும் பரமத்தில் வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துகொண்டதாக பிரகாஷ் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கொடுத்தப் புகார் மனுவில், “முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. அவர் அமைச்சராக இருந்தபோது, பல நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கி ரூ.10 கோடி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அவரது தம்பி சேகருக்கும் வட்டிக்கு கடனாக கொடுத்தேன். மாத வட்டியாக ரூ.15 லட்சம் பணத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கொடுக்காததால், அவரது வீட்டிற்கு சென்று பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு என்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடித்து, ஆபாசமாக பேசி அனுப்பிவிட்டார். 
 

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு கரூர் உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வரச்சொன்ன விஜயபாஸ்கர், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனது ₹100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு பேருக்கு எழுதி தரும்படி கேட்டு மிரட்டினார். நான் எதற்காக உங்களுக்கு எழுதித்தர வேண்டும்? முடியாது, நான் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன், “ஏன்டா... நான் அமைச்சராக இருந்தபொழுது என் செல்வாக்கை பயன்படுத்தி உன் வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடித்து வாங்கிய சொத்துகள் தானடா அவைகள், அவற்றை எழுதிக்கொடுக்கச் சொன்னால் முடியாது என்கிறாயா” என்று சொல்லி என்னை கன்னத்தில் அடித்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் எனது மகள் ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களை செட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது மகள் ஷோபனா மற்றும் என் மனைவியை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்துள்ளனர். இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில பத்திரப்பதிவை ரத்து செய்ய மனு அளித்தேன்.

சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அரசியல் பலம் மற்றும் பண பலம் படைத்தவர்களாக இருந்ததால் பயத்தின் காரணமாக இதுவரை புகார் அளிக்காமல் தற்சமயம் புகார் அளிக்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்னையும் எனது குடும்பத்தாரையும் ஏமாற்றி சுமார் 100 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடியாக   அபகரிப்பு செய்துகொண்டவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரூர் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பான விசாரனையை வரும் 19 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது. இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். இது தற்போது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.  

Next Story

‘நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை கோரி மனு’  - விசாரணை ஒத்திவைப்பு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing

கரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் ஒரு சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு மே 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இது மதம் சார்ந்த விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை. மேலும் இதற்கு எந்த அனுமதியும் கேட்க வேண்டியது இல்லை.  பொதுவாக விழாக்களில் அனுமதி கேட்பது என்பது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு பொருத்தப்படக் கூடிய ஒலிபெருக்கி வெளியில் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். எனவே இந்த விழாவை நடத்திக் கொள்ளலாம்” என உத்தரவிட்டிருந்தார். 

Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing

அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பின்பற்றி இந்த விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழா நடத்தப்பட்ட பின்பு சர்ச்சையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. மேலும் இது சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு ஒன்றும் உள்ளது. இந்த உத்தரவுகளை எல்லாம் மறைத்து மனுதாரர் தனக்குச் சாதகமான உத்தரவைப் பெற்று விட்டார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு சார்பிலும் இந்த வழக்கில் விரிவான விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 25 ஆம் தேதி (25.06.2024) மதியம் 02.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அப்போது இரு தரப்பு வாதங்களையும் விரிவாக நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.