ADVERTISEMENT

அரசுப் பள்ளியா இது? - பெற்றோர்களின் செயலால் கண் கலங்கிய அமைச்சர்

03:11 PM Jan 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான் இன்று அரசு மற்றும் தனியாரில் உயர் பதவிகளிலும் ஆளும் இடங்களிலும் உள்ளனர். அதனால் மேலும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. தமிழகத்தில் அனைத்து வசதிகளுடனும் பெற்றோர்கள், மாணவர்கள் விரும்பும் முன்மாதிரிப் பள்ளியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பெற்றோர்கள், கல்வி கொடையாளர்களின் உதவியோடு அரசு உதவிகளையும் பெற்று இன்று தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசுப் பள்ளியாக மாற்றி அமைத்திருக்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

இந்தப் பள்ளியைப் பார்க்கும் அரசுப் பள்ளிகளின் மீது பற்றுள்ளவர்கள் தங்கள் ஊரில் தாங்கள் படித்த பள்ளியையும் இப்படி மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் ஒரு பள்ளி 8 மாதங்களில் மாற்றம் கண்டு புதுப்பொலிவு பெற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருவரங்குளம் ஒன்றியம், வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ம் ஆண்டு மே 8ஆம் தேதி நடந்த ஆண்டு விழா மற்றும் கல்வி சீர் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, அப்போதைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய மாணவி லக்சயா, எங்கள் பள்ளியின் தரம் உயர அமைச்சர் உதவிகள் செய்யணும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து பேச வந்த அமைச்சர் உடனடியாக ரூ.35 ஆயிரம் பணத்தை கோரிக்கை வைத்த மாணவி கையில் கொடுத்து நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் போர்டு வாங்கி வைக்கச் சொன்னார். அமைச்சரின் முதல் நிதியோடு பெற்றோர்கள் பச்சலூர் பள்ளிக்குச் சென்று பள்ளியைப் பார்த்து வியந்து நின்ற போது பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி வந்த விருந்தாளிகளுக்கு மதிய விருந்து படைத்ததோடு புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி வளர்ச்சிக்காக எங்கள் பங்களிப்பு என்று ரூ.35 ஆயிரம் காசோலையை கொடுத்து மேலும் வியப்படையச் செய்தார்.

இந்த தொகைகளோடு அரசுப் பள்ளிகள் வளர்ச்சியில் அக்கரைமும் ஆர்வமும் கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூர் கொடையாளர்களின் உதவியும் கிடைக்க மேலும் பல கட்டமைப்பிற்கு அமைச்சரும் அரசு திட்டங்களை பெற்றுத் தர உள்ளூர் இளைஞர்கள், பெற்றோர்கள், முனனாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பையும் செலுத்து இரவு பகலாக உடல் உழைப்பையும் கொடுத்தனர்.

இந்தத் தொகைகளோடு அரசுப் பள்ளிகள் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூர் கொடையாளர்களின் உதவியும் கிடைக்க, மேலும் பல கட்டமைப்பிற்கு அமைச்சரும் அரசுத் திட்டங்களைப் பெற்றுத் தர உள்ளூர் இளைஞர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பையும் செலுத்தி இரவு பகலாக உடல் உழைப்பையும் கொடுத்தனர்.

சரியாக 8 மாதங்களில் பழைய வகுப்பறைக் கட்டடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு ஃபால் சீலிங், புதிய மின்விசிறிகள், ஸ்மார்ட் ரூம், சுவர்களில் வண்ண ஓவியங்கள், பேவர் பிளாக் தரைத் தளம், பிரமாண்ட கலையரங்கம், சுற்றுச்சுவர், நவீன கழிவறைகள், குடிதண்ணீர் வசதி என ரூ.25 லட்சம் செலவில் புதுப்பொலிவு பெற்று 2023 ஜனவரி 7ந் தேதி அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவின்போது ஸ்மார்ட் ரூமில் வைத்து 8 மாதங்களில் எப்படி பள்ளி புதுப் பொலிவு பெற்றது என்பதை 5 நிமிட வீடியோவாகப் பதிவு செய்திருந்ததை ஓட விட அத்தனை பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க அமைச்சர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தென்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் அமைச்சர் போட்ட விதை இன்று விருட்சமாக வளர்ந்திருப்பதாகக் கூறினார்கள்.

தொடர்ந்து பேசிய சின்னத்துரை எம்எல்ஏ, “கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியைப் பார்த்து மற்ற பகுதிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். 8 மாதங்களுக்கு முன்பு பார்த்த பள்ளி இன்று எப்படி இருக்கிறது என்பதைக் காண வந்தேன். அமைச்சர் கொடுத்த நிதி எப்படியெல்லாம் மாறி இருக்கிறது. அத்தனையும் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிதானா இது என்று வியப்பாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களின் முழு உழைப்பும் தன்னார்வலர்களின் தன்னலமற்ற உதவியும் இன்று இந்த வியப்பைக் கொடுத்திருக்கிறது. எங்கள் தொகுதியிலும் இப்படியான பள்ளிகளை உருவாக்குவோம் என்றார்.

அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, “பள்ளி ஆண்டு விழாக்களுக்கு அழைப்பார்கள் போவோம் பேசுவோம் வருவோம். அப்படித்தான் ஆண்டு விழாவில் கலந்துகொண்டேன். மாணவியை வைத்து ஸ்மார்ட் போர்டுக்காக கோரிக்கை வைத்தார்கள். சிறு தொகையைக் கொடுத்தேன். அந்த சிறு தொகையை வைத்து இன்று இத்தனை லட்சங்களை பெற்று பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியரின் வழிகாட்டலோடு மற்றுமொரு முன்மாதிரி அரசுப் பள்ளியை உருவாக்கி உள்ளார்கள். 5 நிமிடம் ஓடிய ஆவணப் படத்தைப் பார்த்தபோது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. எப்படி இருந்த பள்ளி இப்படி பொலிவு பெற்றுள்ளது. இது போல ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மாற வேண்டும். அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைய செய்து கொண்டிருக்கிறார். மேலும் பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் முன்வர வேண்டும். புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி மாற்றங்களைக் காண 8 மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. இன்னும் நிறைய பள்ளிகள் மாற நான் முழுமையாகத் துணையாக இருப்பேன்” என்றார்.

விழாவிற்கு வந்த நூற்றுக்கணக்கானோரும் பள்ளியை வியப்பாகப் பார்த்தனர். வண்ணங்களாலும் வண்ண விளக்குகளாலும் மட்டும் பள்ளி அலங்கரிக்கப்படவில்லை அறிவை புகட்டும் அத்தனை நவீன வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளது இந்த புதுமைப் பள்ளியில். இந்த பள்ளியைக் காண இனி ஏராளமானோர் வருவார்கள். இந்தப் புதுமைப் பள்ளி மாணவர்களை வைரமாகப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க வேண்டிய கடமையும் உரிமையும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT