ADVERTISEMENT

“ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்” - அமைச்சர் உத்தரவு

12:01 PM Jan 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத் துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிக செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல” என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, "ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை நட்டாற்றில் விட்டுள்ளது திமுக அரசு. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மறந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது” எனது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஒப்பந்த செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், அதனால், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT