ADVERTISEMENT

'தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கலாம்'!

10:51 PM Oct 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி, தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் பருவமான 2019- 2020ல், 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 205 கோடி சேர்த்து மொத்தம் ரூபாய் 6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5,85,241 விவசாயப் பெருமக்கள் பயனடைந்துள்ளனர். இந்த கொள்முதல் அளவானது தமிழ்நாடு வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.

தற்போது 01/10/2020 அன்று துவங்கியுள்ள 2020- 2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூபாய் 1,888 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூபாய் 1,868 ஆக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இத்துடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூபாய் 70 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூபாய் 50 வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூபாய் 1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூபாய் 1,918 வழங்கப்படும்.

மேற்கண்டவாறு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு இயந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொள்முதல் பணி 01/10/2020 முதல் துவங்கப்பட்டுள்ளது. 02/10/2020 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாகும். எனவே இன்று (03/10/2020) அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாகக் கொள்முதல் செய்யும் பொருட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்றும் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்கள் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளன.

தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை இயந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலிதீன் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாலும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்." இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT