Skip to main content

விவசாயி தற்கொலை... குண்டர்களுடன் சென்று மிரட்டிய வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்! 

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
ksa

 

 

கரோனா காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை அறிவித்திருக்கிற நிலையில் திருப்பூர் விவசாயி ராஜாமணியின் தோட்டத்திற்குக் குண்டர்களுடன் சென்ற, வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் கேவலமாகவும், தரக்குறைவாகவும் அவரை ஏசியுள்ளனர். அதோடு அவரது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குக் காரணமான வங்கி மேலாளர் உள்பட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாகவே இருப்பதைச் சரி செய்வதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதனால் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும். முதல்கட்டமாக குறைந்தபட்சம் வட்டியாவது தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசு ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி சமீபத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் வங்கி மோசடி செய்தவர்களின் கடன் ரூபாய் 68 ஆயிரத்து 670 கோடி தள்ளுபடி செய்தது நாட்டு மக்களுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கு மத்திய அரசின் போக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

 

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய விவசாயி ராஜாமணி அங்குள்ள ஆக்ஸிஸ் வங்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் விவசாயக்கடன் பெற்றிருந்தார். தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனைக் கட்ட இயலவில்லை. எனினும் மிகவும் சிரமப்பட்டு  குறிபிட்ட அளவுக்கு மேல் தவணைகளைச் செலுத்திவந்துள்ளார்.

 

கரோனா காலத்தில் அவரால் தொடர்ச்சியாக தவணையைச் செலுத்த இயலவில்லை. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்தக் காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று பல்வேறு வகைகளில் அறிவித்திருக்கிறது. இதை மீறுகிற வகையில் கடந்த இரு வாரங்களாக வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் ராஜாமணி தோட்டத்திற்குக் குண்டர்களுடன் சென்று தொடர்ந்து மிரட்டியிருக்கின்றனர். 'கடன் கட்ட முடியாத உனக்கு எதுக்குடா காடு, தோட்டம்' என்று மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் ஏசியுள்ளனர். அதோடு அவரது குடும்பத்தினரையும் வார்த்தைகளால் சொல்ல இயலாத வகையில் அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். இதனால் கிராம மக்களிடையே அவமானப்படுகிற நிலை ஏற்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டறிந்த அவரது குடும்பத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனை, கோவை மருத்துவமனை என அழைத்துச் சென்று எவ்வளவு முயற்சி செய்தும் சிகிச்சை பலனிக்காமல் இறந்து விட்டார். இது விவசாயிகள் மத்தியில் கடும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உத்தரவுகளின் மீறி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்திலும் கடுமையான கடன் வசூலிப்புப் பணிகளின் ஈடுபட்ட தாராபுரம் நகர ஆக்சிஸ் கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அதிகாரிகள் ஆகியோரின் அத்துமீறிய நடவடிக்கைகளின் காரணமாகத்தான் விவசாயி ராஜாமணி தற்கொலை செய்யப்பட்டார். இந்தத் தற்கொலைக்கு அவர்கள் தான் பொறுப்பாகும். எனவே, தற்கொலைக்குக் காரணமான இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், விவசாயி ராஜாமணி பெற்ற அனைத்துக் கடனையும் தள்ளுபடி செய்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.  

 


இதற்குக் காரணமான வங்கி மேலாளர் உள்பட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.