Skip to main content

பால் பிடிக்கும் பருவத்தில் நீரின்றி கருகும் சம்பா- தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

dry without water during season

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நீரை ஆதாரமாக  வைத்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். தற்பொழுது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியாக உள்ளது. நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வரக்கூடிய தண்ணீர் அளவு குறைந்து விட்டது. கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சையை பொறுத்தவரை கல்லணை கால்வாய் பாசனமும், வெண்ணாறு, காவேரி பாசனத்தின் மூலம் தான் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்பொழுது நீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் நட்ட பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் மோசமான நிலையில் உள்ளதால் சம்பா பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி தஞ்சை செல்லப்பட்டி என்ற கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையோர சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்