ADVERTISEMENT

அரசியல் தலைவர்களின் ‘அடடே’ எளிமை! -அசத்தலான புகைப்படங்கள்!

01:30 AM Feb 10, 2019 | cnramki

ADVERTISEMENT

சாத்தூர் அருகிலுள்ள வெங்கடாசலபுரத்தில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிலிருந்து கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் நின்றுகொண்டிருக்க, சோதனை ஓட்ட நிகழ்வினைப் பார்வையிட்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஒரு கையை ஊன்றி, ஒருக்களித்துத் தரையில் குந்தியபடி, செம்பைக் கவிழ்த்து தண்ணீர் குடித்தார்.

ADVERTISEMENT

அமைச்சரின் இச்செய்கையைக் கவனித்த ஆளும் கட்சியினர் “எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் எத்தனை எளிமையாக சீவலப்பேரி நீரைச் சுவைத்து சோதித்துப் பார்க்கிறார் அமைச்சர்..” என்று ‘உச்’ கொட்டினார்கள். இதைக்கேட்டு ஓரிருவர் நமுட்டுச் சிரிப்புச் சிரித்த அந்த நேரத்தில், நமது ஆல்பத்தில் இடம்பெற்ற தலைவர்கள் பலரும் மனத்திரையில் விரிந்தனர்.

எளிமையை இயல்பாகவே கொண்ட தலைவர்களை நாம் அறிவோம். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காகத் தங்களை எளிமையாகக் காட்டிக்கொள்ளும் தலைவர்களையும் பார்த்திருக்கிறோம். யாரையும் விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல. ஆனாலும், அந்தந்த வேளைகளில், கடமையுணர்வு மேலிடவோ, நல்லவிதத்தில் மக்கள் மனதில் இடம்பெறுவதற்காகவோ, கேமராவில் பதிவாகியிருக்கின்றனர்.

‘எல்லோரும் நல்லவரே’ என்னும் பார்வையில் நம் தலைவர்களின் புகைப்படங்களை இங்கே பார்ப்போம்!

மாணவர் ஒருவர் 5 மரக்கன்றுகளை நட்டால், அவருக்கு 5 மதிப்பெண் வழங்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாகச் சொன்ன பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், குழி தோண்டி மரக்கன்று நடுவதற்காக மண்வெட்டி பிடித்திருக்கிறார். இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளச் சேதத்தைப் பார்வையிடுவதற்காக வேட்டியை மடித்துக்கட்டியபடி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார்.

தேசத்தை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டிவரும் பிரதமர் நரேந்திரமோடியும் மண்வெட்டி பிடித்தவர்தான். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியோ, வேட்டியை மடித்துக்கட்டி, கழிவு நீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் தூர்வாரி சுத்தம் செய்து, பிரதமரின் பாராட்டைப் பெற்றவராக இருக்கிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, மாதத்தில் ஒருநாள் விவசாயிகளுடன் தங்கியிருந்து குறை கேட்கப்போவதாக அறிவித்தவர். கர்நாடகா முழுவதும் நாற்று நடவுப் பணிகளைத் தொடங்கிவைத்த அவர், மண்டியாவில் சேறும், சகதியுமான வயலில், வேட்டியை மடித்துக் கட்டி, நெல் நாற்றுக்களை இடது கையில் பிடித்தபடி, வலது கையால் நாற்று நட்டார். ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நடவுப் பணிகளைச் செய்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன்னை விவசாயி என்று பெருமிதத்துடன் கூறுவதோடு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மண்வெட்டி பிடிப்பார். கையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு, கலிங்கப்பட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றியிருக்கிறார். தூர்வாரி மண்ணைத் தலையில் சுமந்திருக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வேட்டியை வரிந்துகட்டி இறங்கியிருக்கிறார். இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே எனச் சொல்லி மக்களோடு மக்களாகப் பயணித்துவிட்டு, தற்போது கிராமங்கள் தோறும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவரும் வேட்டியை மடித்துக் கட்டியிருக்கிறார். சாலையோர டீ கடையில் டீ குடிப்பார். ஆட்டோவில் ஏறி தொண்டர்களைக் குஷிப்படுத்துவார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவு சாப்பிடுவார். தொண்டர்களோடு சைக்கிள் பயணம் மேற்கொள்வார். பேன்ட்டை ஏற்றிவிட்டு, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறுவார். மக்களோடு இரண்டற கலப்பதில் அலாதி பிரியம் உள்ளவர்.

பொது இடங்களில் ஏழை மக்கள் மீது பாசத்தைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆரே. முகம் முழுவதையும் வறுமைக்கோடுகள் ஆக்கிரமித்து அழும் மூதாட்டி ஒருவரை, ஒரு கையில் சோடா இருந்தாலும், இரு கரங்களாலும் நெஞ்சோடு அணைத்து, தன் முகத்தை அவர் முகத்தோடு அழுத்தி, உருக்கத்தை வெளிப்படுத்துகின்ற அந்தப் புகைப்படத்தை எம்.ஜி.ஆரின் இளகிய மனதிற்கு சாட்சியாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆரும் மண்வெட்டி பிடித்திருக்கிறார். வெள்ளப் பகுதியில் வேட்டியை மடித்துக்கட்டி இறங்கியிருக்கிறார்.

போராட்டமே வாழ்க்கையாகிப்போன கலைஞரும் ஆடம்பர அரசியல் தலைவர் கிடையாது. வீட்டில் எப்போதும் லுங்கியுடனே காணப்படுவார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நள்ளிரவில் கைது செய்து வீட்டிலிருந்து தூக்கிச்சென்றபோது, சென்னையில் மத்திய சிறைச்சாலை எதிரில் லுங்கியுடன் தரையில் அமர்ந்து, முதுமையிலும் அவர் வெளிப்படுத்திய அந்தப் போர்க்குணம் கலைஞருக்கே உரித்தானது.

ஏழைப் பங்காளர் என்ற வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட அப்பெருந்தலைவர் மக்கள் மீது காட்டிய பாசம் அசலானது. வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் நேரு, பல நேரங்களில் மகாத்மாவின் கால்மாட்டில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

மேல் சட்டைகூட அணியாமல், ஒருமுழம் வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு, உலகம் முழுவதும் வலம் வந்தவர் அல்லவா மகாத்மா! எளிமையின் இலக்கணம் என்றால், அது நம் தேசப்பிதாதான்!

அரசியல் தலைவர்களின் தோற்றத்தை மட்டுமல்ல.. அவர்கள் இயல்பினையும், புகைப்படங்களின் வாயிலாக, அழகாக பதிவு செய்திருக்கிறது வரலாறு!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT