ADVERTISEMENT

மேகதாது விவகாரம்; அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்

08:46 AM Jul 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பாசனத்திற்கேற்ப நீர் அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என பிரதமரை 3 முறை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், “தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.20 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாதத்தில் வெறும் 2.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து ஜூலை மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேகதாதுவில் கர்நாடக அரசு சார்பில் அணை கட்டும் விவகாரம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT