Cauvery water issue; Order to open water to Tamil Nadu

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் (11.10.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் காணொளி வாயிலாகத் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்தக் கூட்டத்தின் போது 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடகாவில் மழை குறைவாகப் பெய்துள்ளதால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாத சூழல் இருப்பதாகக் கர்நாடக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை எனத்தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 16 நாட்களுக்கு நீர் திறக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிடக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தது.

Advertisment

இந்நிலையில், இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் அவசரக் கூட்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதன்படி தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறையின் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம், காவிரி தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் பட்டாபிராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தபடி அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.