ADVERTISEMENT

மக்களை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் (படங்கள்)

11:46 AM Dec 10, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலானது இன்று அதிகாலை மூன்று மணி அளவில் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் போது இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்தது. சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. படகுகள் சேதமடைந்தன.

ADVERTISEMENT

புயல் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகில் இருந்த தனியார் பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் பங்கின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. எண்ணூர் தாழங்குப்பத்தில் கடல் நீர் குடியிருப்புப் பகுதியில் உட்புகுந்ததால் அங்கு வசித்து வரும் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதே போன்று காசிமேடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகளும் சேதமடைந்தன. பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து ஒன்றின் மீது பேருந்து நிலையக் கூரை விழுந்ததில் பேருந்தின் மேற்கூரை பாதிப்படைந்தது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.

கீழ்பாக்கம் கெல்லிஸ் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் ஒரே இடத்தில் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தினர். பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் கடல் நீரானது அங்குள்ள குப்பம் பகுதியில் உட்புகுந்தது. இதனால் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

- படங்கள் ஸ்டாலின், குமரேஷ், அசோக்குமார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT