ADVERTISEMENT

தம்பியின் மாமியார் வீட்டில் கைவரிசை காட்டிய நபர் கைது!!

03:08 PM Jun 14, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்குச் செல்பவர்களை மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார் என்று நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. அதேபோல் ஒருவர் உண்மையாகவே தனது பெரியப்பா மகனின் மாமியார் வீட்டில் திருடியதால், சிறை என்ற மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது T.கோபுராபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் தர்மராஜ் (27) வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்துவந்தார்.

இவருக்கும் காங்கிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவரது மகள் சந்தியாவுக்கும் இரு குடும்பத்தினரின் ஒப்புதலோடு நேற்று (13.06.2021) T.கோபுராபுரத்தில் உள்ள கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. அதிகாலை 5 மணிக்குத் திருமணம் என்பதால், திருமண வீட்டார் விடியற்காலை 4 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காகக் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். திருமணம் முடிந்து காலை 7 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

திருமண வீட்டில் அதிகாலை நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது குறித்து திருமண வீட்டார் விருத்தாசலம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தக் கொள்ளை வழக்கில் போலீஸாரின் தீவிர விசாரணையில், மணமகனின் சித்தப்பா முருகேசனின் மகன் பாபு (30) தான் அந்த வீட்டில் திருடியது எனத் தெரியவந்துள்ளது. அவர் திருமண வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணம், நகை ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT