ADVERTISEMENT

"மதுக்கடைகளைப் பாதியாகக் குறைக்க வேண்டும்!" - முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை!

08:26 PM Feb 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை, மது போதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளைத் தாக்குவதுவரை சென்றுவிட்டது. மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்கிற வாக்குறுதிகள், கொடுத்தவருடன் மறைந்துவிட்டன.

மதுவினால் ஏற்படும் தீமைகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவருகிறது. கரோனா சமயத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சென்றோம்.

மது விற்பனை குறைக்கப்பட வேண்டும், மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றினோம்.

மது விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டிய காரியம் இல்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து இலக்குகளை நிர்ணயித்துப் பெருக்க வேண்டிய தொழிலும் இல்லை. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், சட்டம் ஒழுங்கு, தொழில் வளர்ச்சி, விவசாயத்துறை வளர்ச்சி என்று அரசின் கவனமும், ஆற்றலும் செலவிட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. மதுவால் வரும் வருமானம் நல்லரசுக்கு அவமானம்.

கரோனாவினால் வருவாய் இழந்த ஏழை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாட ரேஷன் கடை வாயிலாகக் கொடுக்கும் பணத்தை மதுக்கடைகளின் மூலமாகத் திரும்ப வசூலித்துவிடுவோம் என்று அமைச்சரே பேசும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை இழிந்து போய் கிடக்கிறது.

மாநில அரசு மதுக்கடைகள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும். இப்போதிருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை உடனடியாக பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். மீதமுள்ள கடைகளைக் கூட படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். மது விற்பனை தனியார் வசம் இருந்தபோது இத்தனை கடைகள் இல்லை. மதுப் பழக்கம் இப்படி கட்டற்றுப் பரவவில்லை. தனியார் கடைகளுக்கும் மிக மிக மட்டுறுத்தப்பட்ட வினியோகங்கள், கடுமையான கண்காணிப்புகள், நேரக்கட்டுப்பாடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எங்கெல்லாம் மதுக்கடைகள் இருந்ததோ, இருக்கிறதோ அங்கெல்லாம் தரமான இலவச மதுப் பழக்கத்தினர் மறுவாழ்வு மற்றும் வழிகாட்டி மையங்கள் அரசால் தொடங்கப்பட வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்தும் நிலை நோக்கி முதல் அடி எடுத்துவைக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காக இதைச் செய்ய வேண்டிய அரசு அக்கறை இல்லாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் பெண்களைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவாவது தமிழக அரசு உடனடியாக மதுக் கொடுமை விஷயத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT