ADVERTISEMENT

தமிழக கேரள எல்லையில் சுற்றித்திரிந்த 'புல்டோசர்' எனும் மக்னா -துடிதுடித்து உயிர்விட்ட பரிதாபம்!  

05:35 PM Sep 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக-கேரள எல்லையில் வலம்வந்த மக்னா யானை கடந்த சில நாட்களாகவே வாயில் காயத்துடன் திரிந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானைக்கு பழங்குடியின மக்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

சாதாரண காட்டு யானைகளை விட அதிக மூர்க்கத்தனம் கொண்டதாகவும், உருவத்தில் மிகப் பெரியதாகவும் இருக்கக்கூடியவை மக்னா யானைகள். தமிழக கேரள எல்லையில் சுற்றிவந்த மக்னா யானை வயல் நிலங்களைச் சேதப்படுத்துவதும், வீடுகளையும் இடித்துத் தள்ளுவதுமாக இருந்துள்ளது. இதனால், அப்பகுதி பழங்குடியின மக்களால் அந்த யானைக்கு 'புல்டோசர்' என்று பெயரிடப்பட்டது. இப்படிச் சுற்றி வந்த இந்த மக்னா யானை கடந்த மாதம் 15ஆம் தேதி வாயில் ஏற்பட்ட சிதைவு காயத்துடன் சுற்றித் திரிந்தது கேரள வனத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யானையின் நாக்கு முழுமையாக துண்டிக்கப்பட்டு வாய் அழுகிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது. மக்னா யானை வாயில் சேதம் ஏற்பட அவுட்டுகாய் எனப்படும் வெடிமருந்துதான் காரணம் எனக் கூறப்படும் நிலையில், சிகிச்சை அளிக்கப்படாமல் மீண்டும் வனத்தில் விடப்பட்டது மக்னா.


கடந்த வாரம் தடாகம் முகாமில் புகுந்த யானை, அங்கிருந்த சமையலறைக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியது. முகாமின் உள்ளே சிலிண்டர் இருந்ததால் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டினர். மீண்டும் தமிழக எல்லையில் இருந்து கேரள எல்லைக்குச் சென்ற யானை சோலையூர் மரப்பாலம் பகுதியில் விழுந்து கிடந்தது. மருத்துவர்களும், பழங்குடியின மக்களும் செய்வதறியாமல் சுற்றி நின்றிருந்த நிலையில் துடிதுடித்துப் பரிதமாக உயிரிழந்தது மக்னா யானை. உயிரிழந்த யானைக்கு பழங்குடியின மக்கள் தங்களது முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT