ADVERTISEMENT

திட்டமிட்டு வியாபாரியிடம் 50 லட்சம் கொள்ளை; காவலர் உள்பட 5 பேர் கைது

10:37 AM Apr 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். துணி வியாபாரியான இவர், கடந்த 12 ஆம் தேதி இரவு தனது மனைவியுடன் காரில் பண்ருட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் அபுபக்கர் சித்திக் (வயது 27) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மேலூர் அருகே உள்ள திருச்சுனை என்னும் இடத்தில் போலீஸ் தோற்றத்தில் உடை அணிந்த 2 பேர் காரை நிறுத்தி ஷேக் தாவூது தனது பையில் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தையும், அவரிடம் இருந்த செல்போனையும் பிடுங்கிக் கொண்டு அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஷேக் தாவூது போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தேடி வந்தனர். கொள்ளையர்களால் பறிக்கப்பட்ட ஷேக் தாவூத்தின் செல்போன் சிக்னலை கொண்டு ஆய்வு செய்தபோது அந்த செல்போனானது புதூர் பகுதியில் உள்ளதாகக் காட்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார், ஷேக் தாவூத்திடம் புதூரில் யாராவது தெரிந்தவர்கள் உங்களுக்கு உள்ளனரா எனக் கேட்டபோது தனது கார் ஓட்டுநர் அபுபக்கர் சித்திக் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் டிரைவர் அபுபக்கர் சித்திக்கை பிடித்து விசாரித்த போது, அவரது சகோதரர் சதாம் உசேன் (வயது 32), அசன் முகமது (வயது 30), பார்த்தசாரதி (42), மதுரை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த நாகராஜன்( வயது 39) ஆகியோர் சேர்ந்து ஷேக் தாவூத்திடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து அபுபக்கர் சித்திக், ஆயுதப்படை காவலர் நாகராஜன் உட்பட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கார் ஓட்டுநர் அபுபக்கர் சித்திக் கொடுத்த தகவலின்படி திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT