ADVERTISEMENT

வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சாமானியர்கள் நேர்மையாக இருக்கிறார்கள்! முதல்வர் எடப்பாடி பெருமிதம்!!

12:07 AM Jul 23, 2019 | santhoshb@nakk…

வங்கிக்கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவதில் ஏழை எளியவர்களும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் நேர்மையாக செயல்படுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதமாக கூறினார். தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் மாநில அளவிலான வங்கிக்கடன் வழங்கும் விழா, சேலத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22, 2019) நடந்தது. வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் வரவேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 31406 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 112 கோடி ரூபாய் கடன்களை வழங்கினார். பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தின் கீழ் 10 பள்ளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT


விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது: தமிழ்நாடு கிராம வங்கிக்கான மூலதனம் 50 சதவீதம் மத்திய அரசு மூலமும், 35 சதவீதம் தேசிய வங்கி மூலமும் வழங்கப்படுகிறது. தேசிய வங்கிகள், இந்த வங்கியை நிர்வாகம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் 630 கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி, விரைவில் 1000 கிளைகளை எட்ட உள்ளது. இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 23 ஆயிரம் கோடி ரூபாய். நிறுவனங்களைத் தவிர மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஏழை எளியவர்களுக்கு மட்டும் அதிகளவில் கடன்களை வழங்குவதால் வாராக்கடன் மிகக்குறைவு. மற்ற வங்கிகளின் வாராக்கடன் 10 சதவீதத்திற்கு மேல் உள்ள நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியின் வாராக்கடன் 1.79 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சாமானிய மக்களின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.

ADVERTISEMENT


அதே போல 99 சதவீத மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தி விடுகின்றன. இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு பிணை இல்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. முதல்வராக இருந்தால் கூட செக்யூரிட்டி இல்லாமல் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் தமிழ்நாடு கிராம வங்கியில் செக்யூரிட்டி இல்லாமல் கடன் கொடுப்பது வரவேற்கத்தக்கது. கந்து வட்டியில் இருந்து ஏழைகளை மீட்கவும், மகளிர் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு கிராம வங்கியின் கடன் சேவை உதவி புரிகிறது.


சேலம் மாவட்டத்தில் 26215 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் 87305 குழுக்களுக்கு 2378 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், கால்நடைகளை வாங்க 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எனவே இதனை கிராமப்புற விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT