ADVERTISEMENT

வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

05:44 PM May 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். கெங்கையம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு ஊர்வலம் வரும் 15.05.2023 அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்துகொள்ள வசதியாக சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான 15.05.2023 - ஆம் தேதி திங்கட்கிழமை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக 24.06.2023 அன்று சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், 25.06.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நடைபெறும் இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கடந்த ஆண்டு 5 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாகப் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரசு திருவிழாவை முன்னிட்டு 1700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் மக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளது. பழைய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எந்த விதமான அச்சமின்றி சிரசு திருவிழாவிற்கு வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT