Persons trapped in lift at Vellore Collectorate

Advertisment

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ளது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இங்கு, கடந்த மே 6 ஆம் தேதி மனுக்கள் அளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்தனர். ஆனால், ஜூன் 4 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி நடைமுறைகள் நாடுமுழுவதும் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்களை வைக்க பெட்டகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனுள்ளே பொதுமக்கள் மனுக்களை செலுத்தி விட்டு சென்றனர்.

இந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சாலை விளக்குகள் பழுதடைந்துள்ளதால் மின் விளக்குகளுக்கான மின் இணைப்பு பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் பின்புறம் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டுவதற்கான பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, மின்சார அறையில், அதிக வெப்பத்தின் காரணமாக மின்சார மீட்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால், திடீர் தீ விபத்து ஏற்படுள்ளது. இந்தத்தீ விபத்தில், அப்போது பணியிலிருந்த சந்தோஷ் என்பவர், பலத்த காயமடைந்தார். உடனே, அருகில் இருந்தவர் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, விபத்தில் சிக்கிய சந்தோஷ் சிகிச்சைப் பெற்றார்.

மறுபுறம், இந்தத்தீ விபத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது, ஏ பிளாக்கில் இயங்கி கொண்டிருந்த இருலிப்ட்டுகளும் மின்சாரம் இல்லாமல் பாதியிலே நின்றது. அதில், ஒரு லிப்டின் உள்ளே இருந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் என 9 பேர் எதிர்பாராதவிதமாக லிப்டிலேயே சிக்கிக் கொண்டனர். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தொடர்ந்து, வெளியேற முடியாமல் கூச்சலிட்டு சிக்கித் தவித்தனர். உடனே, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு பணி நடைபெற்றது. இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் பற்றக்குறை ஏற்பட்டும் சூழல் நிலவிய நிலையில், லிப்ட் சாவி மூலம் ஒரு வழியாக லிப்ட் திறக்கப்பட்டது. பின்னர், அதனுள் இருந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மின் ஊழியர்களால் பழுது நீக்கப்பட்டு, 20 நிமிடத்திற்கு பிறகு ஜெனரேட்டர் மூலம் இரண்டு கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, லிப்டில் சிக்கிய 9 பேர் மீட்கப்பட்ட பரபரப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்சார அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அலுவலக கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் லிப்ட்டிற்குள் சிக்கி தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் முயற்சிக்கு பிறகு நல்வாய்ப்பாக லிப்ட்டில் சிக்கி தவித்த பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.