ADVERTISEMENT

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்- கிரண்பேடி வரவேற்பு!

12:16 AM Jul 12, 2019 | kalaimohan

புதுச்சேரியில் 1968-ஆம் ஆண்டு முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அடுத்து 38 ஆண்டுகள் கழித்து 2006-ல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 2011-ல் நடத்த வேண்டிய தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டிற்கு ஒரு முறை நடத்த வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் தான் மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும்.

ADVERTISEMENT


2011-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த அரசுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அரசு தரப்பில் கண்டு கொள்ளப்படாத நிலையே இருந்து வந்தது. இதனிடையே வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் வழக்குகள் தொடரப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் வார்டு வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு வரையறை பணிகள் முடிந்துள்ளன. ஆனாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை பெற முடியவில்லை என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாற்றின.

ADVERTISEMENT


கடந்த மார்ச் மாதம் டில்லி சென்ற கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ‘விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்’ என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக காலியாக உள்ள மாநில தேர்தல் ஆணையர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

25 ஆண்டுகள் அரசு பணி புரிந்து, தேர்தல் நடத்தி அனுபவம் உள்ள 65 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்ளாட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 29-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 5 நகராட்சிகள், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், பாகூர், வில்லியனூர், கோட்டுச்சேரி, மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் 109 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT