ADVERTISEMENT

மகளின் உயிரை பலி வாங்கிய தந்தையின் குடிப்பழக்கம்!

07:30 AM Jun 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தர்மபுரி அருகே, தந்தையின் மதுப்பழக்கத்தால் மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி அருகே உள்ள பிடமனேரியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 53). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சாரதா (வயது 48). இவர்களுக்கு ஆனந்தி (வயது 19), சக்திசாலா (வயது 17) ஆகிய மகள்களும், சஞ்சய் (வயது 15) என்ற மகனும் உள்ளனர்.

சதாசிவத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு மனைவி கண்டித்தும், அவர் மது குடிப்பதைத் தொடர்ந்து வந்துள்ளார். கடந்த ஜூன் 7-ஆம் தேதி மாலை வேலை முடிந்து சதாசிவம் வீட்டிற்கு வழக்கம்போல் குடிபோதையில் வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், சதாசிவம் கோபித்துக்கொண்டு வெளியே சென்று விட்டார்.

கணவரின் குடிப்பழக்கத்தால் வீட்டில் தினமும் சண்டை நடந்து வருவதால் விரக்தி அடைந்த சாரதா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தான் இறந்துவிட்டால் குழந்தைகளைக் கணவர் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்று கருதிய சாரதா, அவர்களையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.

இதையடுத்து சதாசிவம், வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறிது நேரத்தில், எலிகளைக் கொல்வதற்குப் பயன்படுத்தும் மருந்தைத் தேநீரில் கலந்து, மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளார்.

விஷம் கலந்த தேநீரைக் குடித்த சில நிமிடங்களில் அவர்கள் நான்கு பேரும் வாந்தி எடுத்தனர். பின்னர் மயங்கி விழுந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சாரதா, சஞ்சய், ஆனந்தி ஆகியோர் உயிர் பிழைத்தனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சக்திசாலாவை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 13- ம் தேதி சேர்த்தனர். அங்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திசாலா ஜூன் 15- ஆம் தேதி இரவு பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தர்மபுரி நகரக் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சக்திசாலா, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவுக்காகக் காத்திருந்த நேரத்தில் குடிபோதை தந்தையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT