ADVERTISEMENT

‘உயிர் பொழச்சா போதும்..’ - மிதக்கும் சீர்காழி; வெளியேறும் மக்கள்

08:27 AM Nov 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கிராமம் மற்றும் நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீரானது சூழ்ந்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து பெய்த மழையில் சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும், பொறையாறு பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி காணப்படுகிறது.

குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள சூரக்காடு பகுதியில் கிட்டத்தட்ட 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதி உப்பனாற்றின் கரையோரம் உள்ள பகுதியாகும். இடுப்பளவு தண்ணீரில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சீர்காழி பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நிவாரண மையத்தை நோக்கிச் சென்று வருகின்றனர். இந்த வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT