ADVERTISEMENT

குப்பைகளற்ற சேலத்தை உருவாக்குவோம்! ஆட்சியர் அழைப்பு!! 

11:53 AM Jun 03, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குப்பைகளற்ற, தூய்மையான சேலம் மாவட்டத்தை உருவாக்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார்.


திடக்கழிவு மேலாண்மை குறித்து சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில், ஏற்காட்டில் புதன்கிழமை (ஜூன் 1) நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது; திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள், சுகாதாரமான வாழ்க்கைக்கு அவரவர்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.


திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டம் என்ற நிலையை எய்தியது போல குப்பைகளற்ற மாநகரம் என்ற நிலையை விரைவில் எய்திட அனைவரின் பங்களிப்பும் அவசியம் ஆகும். தமிழக முதல்வர், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 3) சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வெளியேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், பொது இடங்களில் குப்பைகளை போடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். என்.எஸ்.எஸ், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களைக் கொண்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.


பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மத வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தூய்மைப்படுத்தும் முகாம்கள் 2வது, 4வது சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்வுகளுக்கு என ஒவ்வொரு துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை, தொடர்புடைய துறைகள் உரிய முறையில் மேற்கொண்டு குப்பைகளற்ற சேலம் மாவட்டத்தை உருவாக்கிட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார்.


மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்), சரண்யா (ஆத்தூர்), தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கணேசன், ஆத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜெமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT