ADVERTISEMENT

அதிமுக தம்பிதுரை மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

09:27 PM Aug 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொதுநல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராமப் பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்களது கிராமத்தில் பாதாளச் சாக்கடை வசதி, ரேஷன் கடை கட்டிடம், சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசு கட்டிடங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம், பாதை, மாணவ மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை கட்டமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால் அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த நிலங்களை பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி,மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT