ADVERTISEMENT

குடிமராமத்து ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்த தைலமரக்காடுகள்... விவசாயிகள் வேதனை!!

09:27 PM May 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நீர்நிலைகளை சீரமைக்க குடிமராமத்து பணிகளுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அந்த நீர்நிலைகளை அந்தந்த குளம், ஏரி, நீர்பாசன விவசாயிகள் சங்கங்களின் மூலமே மராமத்துப் பணிகள் செய்ய உத்தரவுகள் இருந்தாலும் ஆளும் தரப்பு சங்கங்களிடம் கொடுக்காமல் பல ஊர்களில் ஆளுங்கட்சி பிரமுகர்களே பெயருக்கு மராமத்து வேலைகள் செய்துவிட்டு பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.

ADVERTISEMENT


அப்படியும் சில கிராமங்களில் விவசாயிகளே தாங்கள் அந்தப் பணிகளை செய்வதாக உறுதியாக இருந்தால் அதற்காக தங்களுக்கு 15 சதவீதம் கமிசன் வேண்டும் என்று ஆளும் தரப்பு பிரதிநிதிகள் வாங்க துடிக்கிறார்கள். இதனால் மாரமத்து பணிகள் பெயரளவுக்கே நடக்கிறது. இந்த வருடம் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி உள்ளது. குடிமராமத்து செய்யவேண்டிய குளம், ஏரி, கண்மாய்களில் தனி நபர் ஆக்கிரமிப்புகள் ஒருபக்கம் என்றால் வனத்துறையின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலைகளில் அவர்களின் அனுமதி இல்லாமலேயே வனத்துறையினர் தண்ணீரை உறிஞ்சிக்கு குடித்து விளைநிலங்களை பாலைவனமாக்கும் தைலமரக்காடுகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றை அகற்றக்கோரி வனத்துறையிடம் பொதுப்பணித்துறை முறையிட்டு எந்த நடவடிக்கையும் இல்லை.


தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி தாலுகாவில் அதிகமான குடிமராமத்துப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், ஏம்பல் சாத்தக்கண்மாய், ஏணங்கம் கண்மாய், இச்சிக்கோட்டை கண்மாய் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள கண்மாய்களிலும் குடிமராமத்து பணிகள் தொடங்கினாலும் வனத்துறையால் வளர்க்கப்படும் தைல மரங்களை அகற்ற வனத்துறையினர் முன்வரவில்லை. இதனால் குடிமராமத்துப் பணிகள் செய்தும் பயனற்று போகப் போகிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பல நல்ல அதிகாரிகளின் உதவியோடு குடிமராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளோம். ஆனால் அந்த கண்மாய்களில் பல வருடங்களாக இருந்து தண்ணீரை உறிஞ்சும் தைல மரக்காடுகளை அகற்றுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை வனத்துறையினர். இப்போது குடிமராமத்து பணி செய்தாலும் தண்ணீரை நிரப்பி விவசாயம் செய்ய முடியாத நிலையை வனத்துறை செய்கிறது. இன்னும் சில நாட்கள் வரை காத்திருப்போம். அதன் பிறகு விவசாயிகளை திரட்டி போராட்டங்களின் வாயிலாக தான் தீர்வுகாண வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT