
2021- ல் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற போட்டி, முட்டல் மோதல்களுடன் தொடங்கி ஆதரவாளர்களை ஒன்று சேர்க்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே தொடங்கிய போட்டி, தற்போது மூன்றாவதாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் வரை நீண்டுள்ளது.வைத்தியலிங்கம்,தனது ஆதரவாளர்கள் மூலம் தானும் போட்டியில் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படி ஒரு நிலை வரும் என்பதை முன்பே உணர்ந்த முதல்வர் எடப்பாடி மாவட்டம் தோறும் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் தனக்கான ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவைப் பெற்றுத் திரும்பியுள்ளார். ஆனால், இன்னும் பல மாவட்டங்களுக்கு போகமுடியாதபடி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓ.பி.எஸ்.,வெளியில் சென்று தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்.
7 ந் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும்கட்டாயத்தில் இருவரும் உள்ளனர். இந்த நிலையில் தான், மாஜி அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் எடப்பாடியுடன் நான் என்று ஒரு படத்தையும் பதிவையும் போட்டு சூசகமாக எடப்பாடிக்கு ஆதரவு என்பதைக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஜெ.மறைவுக்கு பிறகு மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் இருக்கும் அணிக்கு எதிர் அணியில் பயணிக்கத் தொடங்கி ஓ.பி.எஸ் அணிக்கு மாஜிக்கள் கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர், வழக்கறிஞர் நெவளிநாதன் ஆகியோர் தனி அணி உருவாக்கி செயல்படத் தொடங்கினார்கள். இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைப்பிற்கு பிறகும் கூட தனித்தே செயல்பட்டனர். அதனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட கட்சிப் பதவிகள் கூட ஒரே நாளில் பறிக்கப்பட்டது. ( தனக்காக தொடர்ந்து பயணிப்பவர்களின் பதவிகள் பறிக்கப்படுவது குறித்தோ, அவர்களுக்கு கட்சிப் பதவி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றோ ஓ.பி.எஸ் நினைக்கவில்லை என்றுஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் இன்று வரை ஆதங்கமாகஉள்ளது) கட்சிப் பதவிகள் இல்லை என்றாலும் கட்சியில் தொடர்ந்து பயணித்தவர்களுக்கு பா.ஜ.க வலை விரித்தும் சிக்கவில்லை.
இந்த நிலையில் தான் மீண்டும் ஓ.பி.எஸக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் இருந்து சென்னை செல்ல திருச்சி வந்த ஓ.பி.எஸ்-ஐ கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர் உள்ளிட்ட பலர் சென்று சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் வழக்கமான மூவர் அணியில் இருக்கும் வழக்கறிஞர் நெவளிநாதன் இல்லை. காரணம் சில நாட்களுக்கு முன்பு கு.ப.கிருஷ்ணன் பதிவிட்ட இ.பி.எஸ் உடன் நான் என்ற படத்தில் வழக்கறிஞர் நெவளிநாதனும் இருந்தார். அதனால் அவரை அழைக்காமல் சென்று இருக்கலாம் என்றும் ர.ரக்களே கூறுகின்றனர்.

பரபரப்பான சூழ்நிலையில் புதுக்கோட்டை மாஜிக்கள் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எடப்பாடி தரப்போ இவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கவாபோகிறார்கள் என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில் இன்னும் பலர் இருவருக்கும் ஆதரவு கரம் நீட்டலாம். ஆனால்,முதல்வர் வேட்பாளர் பெயர் 7 ந் தேதி அறிவிப்பு என்பது சந்தேகம் தான். மறுபடியும் வாய்தா வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)